அணுமின் நிலையங்களால் சில சவால்களும் உள்ளன: நிபுணர்கள்

2 mins read
6b806149-59a8-4a62-b32c-8e3ee8585b5f
அணுமின் துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக அனுபவம் கொண்ட பேராசிரியர் வில்லியமஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடல் பகுதிகளில் சிங்கப்பூர் அணுமின் நிலையங்களைக் கட்டுவதால் அணுஉலைகளும் பொதுமக்களும் தொலைவாக இருப்பார் என்றாலும், அதில் சில சவால்கள் உள்ளதாகத் தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் அணுமின் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் லாரன்ஸ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

கடல் பகுதிகளில் உள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் தனிமையில் இருக்க நேரிடும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கடலுக்கு அடியில் கம்பிவடங்களைப் பதித்து விநியோகம் செய்ய வேண்டும், பாதுகாப்பு சரியாக இருக்க வேண்டும், வானிலை என்பன போன்ற சவால்கள் உள்ளன என்று திரு வில்லியம்ஸ் குறிப்பிட்டார்.

அணுமின் துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக அனுபவம் கொண்ட பேராசிரியர் வில்லியமஸ் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) செய்தியாளர்களிடம் பேசியபோது இக்கருத்தைத் தெரிவித்தார்.

திரு வில்லியமசுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) பொதுச் சேவைப் பதக்கம் வழங்கப்பட்டது. இவ்வாண்டு 186 பேருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு முதல் ஆலோசனைக் குழுவில் உள்ள பேராசிரியர் வில்லியம்ஸ் 2025ஆம் ஆண்டு தலைவராகப் பொறுப்பேற்றார். 2027ஆம் ஆண்டுவரை ஆணையத்தின் தலைவராகச் செயல்படும் அவர், அணுமின் பாதுகாப்பு தொடர்பிலும் அவசரகாலத்திற்கான கட்டமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்குவார்.

வட்டார அளவில் அணுமின் தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருவதால் சிங்கப்பூருக்குப் பேராசிரியர் வில்லியம்சின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேசியச் சுற்றுப்புற வாரியம் மட்டுமல்லாது மற்ற சில அரசாங்க அமைப்புகளும் அணுமின் எரிசக்தி தொடர்பில் ஆர்வம் இருந்தால் கலந்துரையாடல்களில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆலோசனைக் குழு சுதந்திரமாகச் செயல்படுகிறது. அணுமின் தொழில்நுட்பத்தைச் சிங்கப்பூர் புரிந்துகொள்ளவும் மற்ற நாடுகளுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துச்சொல்லவும் இந்தப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பெருமையாக உள்ளது,” என்று திரு வில்லியம்ஸ் கூறினார்.

சிங்கப்பூர் பாதுகாப்பான முறையில் அணுமின் எரிசத்தியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது.

கட்டுப்படியான விலையிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும்  எரிசக்தியைத் தயாரிக்க சிங்கப்பூர் திட்டமிட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்