பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் சமூகத்துக்குப் பயனளிக்கும் புத்தாக்க முயற்சிகளை முன்னெடுக்க வழிவகுக்கவுள்ளது சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்கள் இரண்டுக்கும் தேசிய நூலக வாரியத்துக்கும் இடையிலான கூட்டு முயற்சி.
தேசிய நூலக வாரியத்தின் வளங்களையும் பல்கலைக்கழகங்களின் நிபுணத்துவத்தையும் இணைக்கும் பல புதிய திட்டங்கள் உருவாக இது உதவும்.
இதன் தொடர்பில், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு), சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) ஆகியவற்றுடன் ஜூன் 4ஆம் தேதி இரவு தேசிய நூலக வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
தேசிய நூலகக் கட்டடத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தேசியச் சவால்களில் பொதுமக்களை ஈடுபடுத்த தேசிய நூலகமும் எஸ்யுடிடியும் ஜனவரி மாதத்திலிருந்து நடத்திவந்துள்ள முன்னோடித் திட்டமான ‘கேட்டலிஸ்ட்’டின் இறுதி நிகழ்ச்சியையொட்டி இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
‘கேட்டலிஸ்ட்’ திட்டம்வழி, திரளான மக்கள் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்பற்றி நேரடியாகவும் இணையம் வழியாகவும் கலந்துரையாடி புத்தாக்கத் தீர்வுகள்குறித்து ஆலோசித்தனர்.
இந்த ஒப்பந்தங்கள்வழி தேசிய நூலக வாரியமும் அவ்விரு பல்கலைக்கழகங்களும் பொதுக் கல்வி முயற்சிகள், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் புத்தாக்கங்கள், நாட்டிற்குத் தேவையான கருப்பொருள்களில் காணொளிகள் போன்றவற்றை இணைந்து உருவாக்கும்.
மேலும், தேசிய நூலகத்தின் மின்னிலக்க, அச்சு வடிவிலான வளங்களின் உதவியுடன் மாணவ ஆராய்ச்சியாளர்களும் ஆசிரியர்களும் ஆய்வு மேற்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
தொழில் ரீதியாக எதிர்காலத் திறன்களை வளர்ப்பதற்கும் வாழ்நாள் கற்றலை ஊக்குவிப்பதற்கும் கற்றல் அனுபவங்களைத் தயாரிப்பதற்கும் இவை உதவும்.
இதைத் தொடர்ந்து, வேலை செய்வோரின் தனிநபர், தொழில்முறை வளர்ச்சிக்குக் கைகொடுக்க தேசிய நூலக வாரியம் வழங்கும் ‘த்ரைவ்@லைப்ரரீஸ்’ விழாவின்கீழ் உள்ள சில திட்டங்களைத் தேசிய நூலக வாரியம் எஸ்எம்யு, எஸ்யுடிடி ஆகியவற்றுடன் இணைந்து வழங்கும். ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரை இவ்விழா நடைபெறும். அதைத் துவங்கிவைக்க எஸ்எம்யுவில் ஆகஸ்ட் 16ஆம் தேதி கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அடுத்த தலைமுறைப் பொறியாளர்களை உருவாக்க எஸ்யுடிடி நடத்தும் ‘வேடிக்கையான இயந்திரங்கள் விழா’வின் (Festival of Funny Machines) தொடக்கத்தையும் தேசிய நூலக வாரியம் ஆதரிக்கும். அதன் முதல் பயிலரங்கு ‘த்ரைவ்@லைப்ரரீஸ்’ விழாவில் இடம்பெறும். தேசிய நூலக வாரிய உறுப்பினர்கள் ஜென்ஏஐ, நகைச்சுவை ஆகியவை குறித்து எஸ்யுடிடி வழங்கும் பயிலரங்குகளில் கலந்துகொண்டு இவ்வாண்டு நடைபெறவுள்ள போட்டிக்குத் தயாராகலாம்.
“தேசிய நூலகத்தைப் புத்தகங்களுக்கு அப்பால் பொதுமக்களையும் வல்லுநர்களையும் இணைத்து, கலந்துரையாடல்களுக்கு வழிவகுக்கும் தளமாக மாற்றியுள்ளோம்,” என்றார் தேசிய நூலகத்தின் கலை, பொதுக் குறிப்பு நூல்களுக்கான நூலகர் முகமது ஷஃபி (Librarian - Arts & Gen Ref).

