நார்ச்சத்து, புரதச்சத்து உற்பத்தியை 2035க்குள் பெருக்க புதிய இலக்கு

2 mins read
01c42670-cbf1-47b9-851d-f898c6e95c56
சென்ற ஆண்டு சிங்கப்பூரர்கள் உண்ட நார்ச்சத்து நிறைந்த உணவில் கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கையை 20 விழுக்காட்டுக்குப் பெருக்க திட்டமிடப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் 2035ஆம் ஆண்டுக்குள் நார்ச்சத்து, புரதச்சத்து உற்பத்தியைப் பெருக்குவதற்கான புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்கான வேளாண் இலக்குக்குப் பதிலாகப் புதிய இலக்குத் தீர்மானிக்கப்பட்டது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ புதிய இலக்குகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் ஆசிய பசிபிக் வேளாண்-உணவுப் புத்தாக்க உச்சநிலை மாநாட்டில் அறிவித்தார்.

அதேநேரம், உள்ளூர் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தும் புதிய வழிகளை அரசாங்கம் ஆராய்கிறது.

பல பண்ணைகளை ஒரே நேரத்தில் பராமரிப்பதற்கான புதிய வசதியை உருவாக்குவதற்கான வழிமுறைகள் ஆராயப்படுகின்றன.

கடந்த ஆண்டு சிங்கப்பூரர்கள் உண்ட நார்ச்சத்து நிறைந்த உணவில் கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கையை 20 விழுக்காட்டுக்குப் பெருக்க திட்டமிடப்படுகிறது.

அதேபோல சிங்கப்பூரர்கள் கடந்த ஆண்டு உட்கொண்ட புரதச்சத்து நிறைந்த உணவில் கிட்டத்தட்ட 26 விழுக்காடு உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தியானது. அந்த எண்ணிக்கையை 2035ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காட்டுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு உட்கொள்ளப்பட்ட முட்டைகளில் 34.4 விழுக்காடும் கடலுணவில் 6.1 விழுக்காடும் உள்ளூரில் உற்பத்தியானவை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் ‘30 பை 30’ இலக்கு 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் கொவிட்-19 பெருந்தொற்றும், சம்பந்தப்பட்ட விநியோகத் தொடர்களும் சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இயல்பாக, புத்தாக்க வேளாண் உத்திகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் உச்சத்தில் இருந்தது.

சிங்கப்பூர் கிட்டத்தட்ட ஒரு விழுக்காட்டு நிலத்தை வேளாண் பயன்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளது.

இருப்பினும் உள்ளூர்ப் பண்ணைகள் அண்மை ஆண்டுகளில் பல்வேறு பின்னடைவுகளை எதிர்கொண்டன. உற்பத்தியில் சரிவு, மூடப்பட்ட பண்ணைகள் எனப் பல சவால்கள் எழுந்தன.

குறிப்பாக, அதிநவீன முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிப் பண்ணைகளும் கடலுணவுப் பண்ணைகளும் பாதிக்கப்பட்டன.

உணவுப் பாதுகாப்பு சிங்கப்பூரில் முக்கிய அங்கம் வகிப்பதை முன்னிட்டு திருவாட்டி ஃபூ நான்கு உத்திகளைக் குறிப்பிட்டார்.

ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்துவது, உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குவது, உற்பத்தியைச் சேமித்து வைப்பது, அனைத்துலகப் பங்காளித்துவம் ஆகியவை அவை.

குறிப்புச் சொற்கள்