ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆதரவுபெற்ற பெரியவர்களுக்கான கற்றல் படிப்புகளைக் கற்பிக்கும் கல்வியாளர்கள், பயிற்சியின் தரத்தை உயர்த்துவதற்காக, பயிற்சி நேரங்களைக் கணக்கிட்டு வழக்கமான பயிற்சிபெற விரைவில் கட்டாயம் எழும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கட்கிழமை (ஜூலை 7) தெரிவித்தார்.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற வருடாந்தர ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவின் தொடக்கக் கருத்தரங்கில் பேசிய திரு லீ, கல்வியாளர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்க தொடர் பயிற்சி பெறுவதைக் கட்டாயமாக்கும் புதிய பயிற்சி, பெரியவர்க்குக் கற்பிக்கும் கல்வியாளருக்கான தொழில்முறைப் பாதையை அறிவித்தார்.
2026 ஏப்ரல் 1 முதல், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆதரவுபெற்ற படிப்புகளை நடத்த விரும்புவோர், பதிவேட்டில் இருக்க வேண்டும். பதிவேட்டில் நீடிக்க, அவர்கள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 40 தொடர் தொழில்முறை மேம்பாட்டு நேரங்களையும் 80 பயிற்சி நேரங்களையும் பூர்த்திசெய்ய வேண்டும்.
பெரியவர்க்கான கல்வியாளர்கள் தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக்கொள்வதையும் தொழில்துறை மேம்பாடுகள், புதிய பயிற்சி முறைகளுடன் இணையாக இருப்பதையும் இது உறுதிசெய்யும் என்று திரு லீ கூறினார்.
தற்போது அவர்கள் பெரியவர்க்கான கற்றல் கழகத்தின் சான்றிதழ் திட்டத்தை மட்டுமே முடிக்க வேண்டும் என்று திரு லீ சொன்னார். ஆனால், இந்த ஒருமுறை சான்றிதழ் போதுமானதாக இருக்காது.
“இந்தப் புதிய பாதையின்கீழ், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆதரவுபெற்ற படிப்புகளுக்கான கல்வியாளர்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்க, பெரியவர்க்கான கல்வியாளர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான, பயிற்சி நேரங்களைக் கணக்கிடுவதற்கான தேவையை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்,” என்று அவர் எடுத்துரைத்தார்.
இந்த ஒருமுறை சான்றிதழ், பெரியவர்க்கான கல்வியாளர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் பதிவேட்டில் சேர்வதற்குத் தேவையான நுழைவிடமாக தொடர்ந்து இருக்கும்.
பெரியவர்க்குக் கற்பிப்போரின் தரத்தை உறுதிசெய்வதோடு மட்டுமல்லாமல், தொழில்துறையிலிருந்து நேரடியாக அதிகப் பயிற்சியாளர்களைக் கொண்டு வருவதும் நோக்கமாக உள்ளது என்று திரு லீ தெரிவித்தார். ஏனெனில், அவர்களிடம் தேவையான அறிவும் அனுபவமும் உள்ளன.