பொருளியல் உருமாற்றத்தில் சிங்கப்பூர் சிறப்பான முறையில் மேம்பாடு கண்டாலும், நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் சிறந்த முறையில் வேலை தேடித் தரும் சேவைகளுக்கும் முழுவதுமாகச் சந்தையைப் பாதிக்கும் அம்சங்களை மட்டும் நம்பியிருக்க முடியாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரர்களின் பயிற்சி, வேலைவாய்ப்புத் தேவைகளுக்கு ஆதரவு அளிக்க, தேசியக் கொள்கைகளும் சமூக அளவிலான முயற்சிகளும் தேவை என்றார் அவர்.
வியாழக்கிழமை (அக்டோபர் 23), ‘ஜாப்ஸ் நியர்பை@சிடிசி’ எனும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.
சமூக மேம்பாட்டு மன்றங்கள் ஐந்தும் வழிநடத்தும் இந்தத் திட்டம் வேலை தேடுவோரை அவர்களின் அக்கம்பக்கத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது.
உள்ளூர்த் திறனாளர்களையும் வேலை தரும் நிறுவனங்களின் தேவைகளையும் சிறப்பான வகையில் இணைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்வந்து மேற்கொள்வதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
“அதனால்தான் பொருளியல் வளர்ச்சிக் கழகம் சிங்கப்பூருக்கு ஒரு புதிய முதலீட்டைக் கொண்டுவரும்போது சிங்கப்பூரில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையையோ இங்கு முதலீடு செய்யப்படும் தொகையையோ மட்டும் நாங்கள் கருத்தில் கொள்வதில்லை. சிங்கப்பூரர்களுக்காக உருவாக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கிறோம். புதிய வேலைகளுக்கு எத்தகைய திறன்கள் தேவை என்பதைப் பார்க்கிறோம். சிங்கப்பூரர்கள் அந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு எப்படிப் பயிற்சி அளிக்கலாம் என்பதில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார் அவர்.
தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐந்து மாவட்டங்களிலும் மொத்தம் 42 சமூக வேலைவாய்ப்பு நிலையங்கள் தொடங்கிவைக்கப்பட்டன.
வேலைவாய்ப்புச் சந்தையில் 22 நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் 24 நிறுவனங்கள் அங்கு வந்திருந்தோரிடம் காணொளி மூலம் நேர்காணல்களை நடத்தின.
தொடர்புடைய செய்திகள்
தேசிய அளவிலான முயற்சிகளுக்கு ஈடாக சமூக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார். ஏனெனில் வேலை தேடுவோரில் சிலருக்குக் குறிப்பிட்ட தேவைகள் இருக்கக்கூடும். சிலர் வீட்டிற்கு அருகிலேயே வேலை பார்க்க விரும்புவர். வேறு சிலர் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை விரும்புவர் என்றார் திரு வோங்.

