சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள ஆக நீளமான சுவரோவியம் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) திறந்துவைக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி கலைஞர்களான சிமியன் டான், எஸ்ரா சான் யி இருவரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ள ‘நமது பொங்கோல் கதை’ எனும் இந்த 132 மீட்டர் நீளமுடைய சுவரோவியம், சமூகத்தில் அனைவரையும் இணைக்கும் கலைச் செயல்பாடுகளுக்கான மைல்கல்லைக் குறிக்கிறது.
‘டெல் யோர் சில்ட்ரன் ஸ்டூடியோஸ்’ வழிகாட்டலுடன் சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழக மாணவர்கள், நார்த்ஷோர் தொடக்கப்பள்ளி மாணவர்கள், பொங்கோல் குடியிருப்பாளர்கள், ஜூரோங் நகராண்மைக் கழக (ஜேடிசி) பங்குதாரர்கள் உட்பட 107 பேரின் முயற்சியில் இந்தச் சுவரோவியம் வடிவம் பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ்’ கலை விழாவின் ஓர் அங்கமான ‘ஆர்ட்ஃபுலி ஏபல் @ பொங்கோல் மின்னிலக்க வட்டாரம்’ நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இந்தப் பிரம்மாண்ட சுவரோவியம் திறந்துவைக்கப்பட்டது.
துணைப் பிரதமர் கான் கிம் யோங் உட்பட பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கும், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும், வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் பே யாம் கெங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அவர்கள் குடியிருப்பாளர்களுடனும் சமூகப் பங்காளிகளுடனும் இணைந்து அனைத்து திறன்களையும் தழுவும் கலையின் சக்தியை ஒன்றாகக் கொண்டாடினர்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தை உருவாக்கிய ஜேடிசி நிறுவனம், இந்தச் சுவரை ஆரம்பத்திலிருந்தே சமூக, கலை முயற்சிகளுக்காக ஒதுக்கியதாகவும் பின்னர் மாற்றுத்திறனாளி கலைஞர்களின் திறமைகளைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் இந்தச் சுவரோவியத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்ததாகவும் பகிர்ந்தது.
அந்தச் சுவரோவியம், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் வெளிப்பாடாகத் திகழ்வதாக திரு பே கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“மாற்றுத்திறனாளி கலைஞர்கள், குடியிருப்பாளர்கள், பங்காளிகள், மாணவர்கள் என்று எல்லோரையும் ஒன்றிணைக்கும் எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் மூலம் நாம் அக்கறைமிக்க, ஒன்றிணைந்த சமூகத்தை உருவாக்க முடியும்,” என்றார் அவர்.
இந்தச் சாதனைக்கான அங்கீகாரமாக, வெளியீட்டு விழாவில் துணைப் பிரதமர் கானுக்கு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகத்தின் வடிவமைப்புத் தொழிற்சாலை இந்தச் சுவரோவியத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.
அங்குப் பணிபுரியும் வடிவமைப்பு ஆய்வாளரும் படைப்புத் தொழில்நுட்பவியலாளருமான அதிதி நெட்டி, 23, இதற்கான செயல்முறைகளை வழிநடத்த உதவினார்.
தமது குழுவுடன் இணைந்து, சுவரோவியத்தை மெருகூட்ட ஒரு புதுமையான மின்னிலக்க அம்சத்தை அவர் உருவாக்கினார். இதன்மூலம், பார்வையாளர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்தி மிகைமெய் தொழில்நுட்ப அவதாரங்களை உருவாக்கி, அவற்றை ஓவியத்தின் வழியாகப் பார்க்க முடியும்.
“முழு சுவரோவியமும் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் அமைந்துவிடக் கூடாது என்று நாங்கள் நினைத்தோம்,” என்று அதித்தி கூறினார்.
மேலும், “பல கலாசாரங்கள், சமூகங்கள் ஒன்றிணையும் இடமான பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் உணர்வை இந்த ஓவியம் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம், கலைஞர்களின் தனிப்பட்ட குரல் மையமாக இருக்க வேண்டும் என்பதும் எங்கள் முக்கிய நோக்கங்களாக இருந்தன,” என்று அவர் கூறினார்.
இந்த மின்னிலக்க அனுபவம், குழந்தைகளையும் குடும்பங்களையும் கலைக்குள் ஈர்க்கும் ஓர் அழைப்பாக அமையும் என்று அதித்தி நம்புகிறார்.
“கலை என்பது வெறும் ஒருமுறை பார்க்கும் ஒன்றன்று. இந்த மின்னிலக்க அம்சம், அனைத்து வயதினரையும் பங்கேற்க அழைக்கிறது. இதன்மூலம், வண்ணப்பூச்சு, கைவினை, தொழில்நுட்பம் உட்பட பல்வேறு வழிகளில் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் படைப்பாற்றலைக் கொண்டு வரலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் நெக்சஸ் பகுதியில் நவம்பர் 16 முதல் 23 வரை ‘ஆர்ட்ஃபுலி ஏபல்’ நிகழ்ச்சி நடைபெறும். இதில், அனைத்து வயதினரையும் கவரும் வகையில் பயிலரங்குகள், கலை நிகழ்ச்சிகள், கதை சொல்லும் அமர்வுகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

