தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னோடித் தலைவர் கோ கெங் சுவீயின் ‘தி ஆல்பட்ரோஸ் ஃபைல்’ ஆண்டிறுதியில் அறிமுகம்

2 mins read
0b8f0c98-7dcd-4a2e-b9f7-1bbaa1f2d5ea
தேசிய நூலக வாரியத்தின் வருடாந்தர நன்கொடையாளர் பாராட்டு இரவில் இடம்பெற்ற கண்காட்சியைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பார்வையிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய நூலக வாரியம், ‘தி ஆல்பட்ரோஸ் ஃபைல்’ (The Albatross File) பற்றிய புதிய நிரந்தரக் கண்காட்சியை டிசம்பர் 8ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும்.

அக்டோபர் 24ஆம் தேதி நடந்த தேசிய நூலக வாரியத்தின் வருடாந்தர நன்கொடையாளர் பாராட்டு இரவில், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ இதை அறிவித்தார்.

“ஆல்பட்ரோஸ் ஃபைல்” என்பது சிங்கப்பூரின் முன்னோடித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான கோ கெங் சுவீ வைத்திருந்த, 1964க்கும் 1965க்கும் இடைப்பட்ட ஆவணங்கள், கையால் எழுதப்பட்ட குறிப்புகள், அமைச்சரவைத் தாள்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும்.

“இது ஒரு முக்கியத் தொகுப்பு. ஏனெனில், 1965ல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிவதற்கு முன்பு நடந்த கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை விவரமாகக் காட்டுகிறது,” என்றார் அமைச்சர் டியோ.

டாக்டர் கோ அக்கலந்துரையாடல்களில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆல்பட்ரோஸ் ஃபைல்’ பற்றி வெளியாகவுள்ள நூல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் இரண்டு முக்கிய வரலாறுசார்ந்த அறிமுகங்களை உள்ளடக்குகிறது. ஒன்று, சிங்கப்பூரும் மலேசியாவும் சேர்வதற்கு முந்தைய நிகழ்வுகள் பற்றிய பகுதி பேராசிரியர் டான் டாய் யோங் வழங்கியது. மற்றொன்று, சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிவதற்கு முந்தைய நிகழ்வுகள் பற்றிய பகுதி, பேராசிரியர் ஆல்பர்ட் லாவ் வழங்கியது.

இரண்டாம் பாகம், ‘ஆல்பட்ரோஸ் ஃபைல்’லிலிருந்து 23 ஆவணங்களைக் கொண்டது. இது அரைப் பக்கக் குறிப்புகளிலிருந்து 20-பக்க அமைச்சரவைத் தாள்கள்வரை நீடிக்கும். மற்ற நாடுகளின் ஆவணங்களுடன் இவை சரிபார்க்கப்பட்டுள்ளன.

மூன்றாம் பாகம், அந்தக் காலத்திலிருந்த சிங்கப்பூர்த் தலைவர்களின் வாய்மொழி வரலாறுகளிலிருந்த துணுக்குகளை உள்ளடக்கும். முதன்முறையாக, டாக்டர் கோ கெங் சுவீ, முதல் பிரதமர் லீ குவான் யூ, திருவாட்டி லீ ஆகியோரின் வாய்மொழி வரலாறுகளிலிருந்து துணுக்குகள் இடம்பெறும்.

“இந்நூல் 488 பக்கங்கள் கொண்டுள்ளது என்பதால், அது பரவலாகப் படிக்கப்படும் என நாம் எதிர்பார்க்கமுடியாது. அதனால்தான் தேசிய நூலக வாரியம் ஒரு கண்காட்சிக்கும் திட்டமிடுகிறது,” என்றார் அமைச்சர் டியோ.

ஆல்பட்ரோஸ் ஃபைல், 1996 வரை பிரதமர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

“நல்ல வேளையாக, ஆல்பட்ரோஸ் ஃபைல் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு 1996ல் மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகக் காப்பகத்தின் ஊழியர்கள் அவற்றைப் பாதுகாத்துவந்துள்ளனர்,” என்றார் அமைச்சர் டியோ.

கண்காட்சிக்கு வருவோர், டாக்டர் கோ, திரு லீயின் கையெழுத்திலுள்ள குறிப்புகள், மலேசியாவுடனான இணைப்பும் பிரிவினையும் குறித்த கொள்கைசார் கலந்துரையாடல்களை விவரிக்கும் அமைச்சரவைத் தாள்களைக் காணலாம். இவற்றில் பலவற்றும் முதன்முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

நாட்டை நிறுவிய தலைவர்களின் இதுவரை பொதுப்படையாக்கப்படாத வாய்மொழி வரலாற்றுத் துணுக்குகளையும் கேட்கலாம்.

இதன்மூலம் சிங்கப்பூரர்கள், இந்நாடு சுதந்திரத்தை நோக்கி மேற்கொண்ட பயணம் பற்றி மேலும் அறிந்துகொள்வதுடன் நம் கூட்டு அடையாளத்தைப் புரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்