பகடிவதைக்குப் பள்ளி, வேலையிடம், இணையம் என எதுவும் விதிவிலக்கல்ல என்றும் மக்களை உறுதியாக இருக்கச் சொல்வதை விடப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் சட்ட அமைச்சர் எட்வின் டோங் வலியுறுத்தியுள்ளார்.
நற்பண்பு, தலைமைத்துவப் பயிற்சிக்கழகத்தின் சார்பில் பகடிவதைக்கு எதிராக நிற்கும் ‘டேக் எ ஸ்டாண்ட்’ (Take a Stand) இயக்கத்தைத் திரு டோங் தொடங்கி வைத்துப் பேசினார்.
“மனநலத்தைப் பொறுத்தவரை ஒரு தவறு நிகழ்ந்தபின் விவாதிப்பதைவிட, முன்கூட்டியே அதற்கான ஆதரவு, கலந்துரையாடல்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் இயக்கங்கள்மூலம் மனநல ஆதரவுக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது,” என்றும் தமது உரையில் குறிப்பிட்டார் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங்.
அவ்வகை இயக்கங்களுக்காகத் திரளும் பங்காளிகளின் கட்டமைப்பு, பள்ளிகள் முதல் பணியிடம் வரை போய்ச் சேர்வதுடன், கொள்கைகளாக இருப்பதைக் கடைப்பிடிக்கும் வழிகளாகவும் மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
பகடிவதையை எதிர்ப்பதுடன், இளையர் மனநலனுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தின் தொடக்க விழா, ‘தி ஃபெளண்ட்ரி’ (the foundry) கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்றது.
“கேட்கப்படாத கதைகளைக் கொண்ட மாணவர்கள், உதவும் வழிமுறைகள் அறியாத பெற்றோர், இவ்வகைப் பிரச்சினைகளை அன்றாடம் சமாளிக்கும் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானோருடனான கலந்துரையாடல்களின் விளைவாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது,” என்றார் நற்பண்பு, தலைமைத்துவத்திற்கான பயிற்சிக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் டெலேன் லிம்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பங்காளி நிறுவனங்களைச் சேர்ந்தோர், சிங்கப்பூர்க் காவல்துறை, பள்ளிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது பள்ளிகளில் நடக்கும் பகடிவதை, அதற்கு ஆளாகும் மாணவர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டோரின் மனநிலை, பகடிவதை ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றைப் பேசும் ‘தி லாஸ்ட் ஸ்ட்ரா’ (The Last Straw) எனும் குறும்படம் திரையிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இணையம் தாண்டி, நேரடியாகப் பேசிப் பழகி, நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; மனவுறுதி என்பது உடன் நிற்பது மட்டுமன்று, எதிர்த்து நிற்பதும்தான் எனும் பாடங்களை இப்படம் உணர்த்தியதாகச் சொன்னார் அமைச்சர் டோங்.
நிகழ்ச்சியில் பகடிவதைக்கு எதிரான உறுதிமொழியேற்பும் இடம்பெற்றது. மேலும், அமைச்சர் டோங், திரு லிம், குறும்படக் குழுவினர் பங்கேற்ற கலந்துரையாடலும் நடைபெற்றது. அதில், சொந்த அனுபவங்களும் கருத்துகளும் பகிரப்பட்டன.
இணையத்தில் வரும் எதிர்மறைக் கருத்துகளுக்குத் தாம் உட்பட யாரும் விதிவிலக்கல்ல என்ற அமைச்சர் டோங், பெரும்பாலும் அவற்றைப் பார்ப்பதைத் தவிர்ப்பதாகவும் சொன்னார்.
தொடர்ந்து, பள்ளிகளிலும் சமூகத்திலும் அன்பை விதைத்து, மனநலனை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்டார்ட, ஸ்டாப், ‘ஷேர்’ எனும் எளிய கட்டமைப்பு அறிமுகம் கண்டது.
மேலும், ‘முஸ்லிம் மாஸ் ஹோல்டிங்ஸ்’ மனநலம் சார்ந்த முன்னெடுப்புகளுக்காக ‘மாஜுரிட்டி’ அறக்கட்டளையின் புளூ ஸ்டார் நிதிக்கு 1 மில்லியன் வெள்ளி நிதியளித்துள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் பாதுகாப்பான கலந்துரையாடலை ஊக்குவிக்கும் விளையாட்டுகளும் நடைபெற்றன.
“நான் இணையப் பகடிவதை நடைபெறுவதைப் பார்த்துள்ளேன். அது மனவுறுதியைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது குறித்து ஆலோசிக்கப்படுவது சிறந்தது,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் சாமி பிரவின், 15.
“மாணவர்கள் தாண்டி, சமூகம், பெற்றோர் எனப் பலதரப்பினரும் இதுகுறித்துப் பேசுவது சிறப்பானது. இவ்வகை இயக்கங்கள் சமூகம் நம்முடன் இருக்கிறது எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும்,” என்றார் மாணவர் முஹம்மது ஹம்தன் காதர் மொஹைதீன், 15.