கல்வியில் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை ஆராய, புதிய உலகளாவிய கட்டமைப்பு ஒன்று சிங்கப்பூரில் தொடங்கப்பட்டு உள்ளது.
‘கெய்ன்ஸ்’ (Gains) என்னும் அந்தக் கட்டமைப்பை நிறுவியுள்ள ஹுவா சோங் கல்வி நிலையம் (HCI), இதர மூன்று பள்ளிகளுடன் தன்னையும் ஒரு பள்ளியாக அதில் இணைத்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பப் பள்ளி (SST), நன்யாங் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கிரசென்ட் பெண்கள் பள்ளி ஆகியன இதர மூன்று பள்ளிகள்.
ஹுவா சோங் கல்வி நிலையம் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஏற்கெனவே தமது மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறது.
பொருளியல் பாடங்களில் ஆக்கமுறை வரைபடங்களைப் பயன்படுத்துவது முதல் பொது ஆய்வறிக்கை கட்டுரைகள் தொடர்பாகக் கருத்து தெரிவிப்பது வரை செயற்கை நுண்ணறிவு அங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ‘சாட்பாட்ஸ்’ போன்ற செயற்கை நுண்ணறிவுக் கூறுகளை அது உருவாக்கி வருகிறது. பயற்சிக்காக ஆசிரியர்கள் அவற்றைத் தெரிவு செய்யலாம்.
புக்கிட் தீமாவில் இயங்கும் ஹுவா சோங் கல்வி நிலையம், பள்ளிகளை உள்ளடக்கிய கட்டமைப்பை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்கியது.
கல்விமுறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடவும் அதில் புத்தாக்கத்தைப் புகுத்தவும் புதிய கட்டமைப்பு குறிக்கோள் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் தொடக்கத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அறிமுகக் கூட்டத்தில், கட்டமைப்புடன் இணைந்துள்ள பள்ளிகளைச் சேர்ந்தோர் நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் கலந்துகொண்டனர்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் திட்டங்களையும் அதில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உலக நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டனர்.
அந்தக் கட்டமைப்புக்குப் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு ஆதரவு வழங்குகிறது. சீனா, ஜப்பான், எஸ்தோனியா போன்றவை உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த 23 பள்ளிகள் கட்டமைப்பில் இணைந்துள்ளன.
2027ஆம் ஆண்டுக்குள் 20 நாடுகளைச் சேர்ந்த 100 பள்ளிகளைக் கட்டமைப்பில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஹுவா சோங் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் லீ பெக் பிங் தெரிவித்துள்ளார்.

