சிங்கப்பூரின் ஐந்து பள்ளிகள் மின்சாரத்தை 8 முதல் 20 விழுக்காடு வரை சேமிக்க ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளன.
அதன்வழி பள்ளியின் அனைத்து மின்சாதனங்களின் மின்சார பயன்பாடு கண்காணிக்கப்பட்டு, மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், செயின்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளி, நன்யாங் தொடக்கக் கல்லூரி, செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப் பள்ளி, ரோஸைத் பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகள் தற்போது ஆறு மாதச் சோதனையாக ‘இக்கோவோல்ட்’ என்ற அக்கருவியைப் பொருத்தியுள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் திறனில் செயல்படும் அக்கருவி ஒரு கட்டடத்தில் உள்ள அனைத்து மின்கருவிகளின் மின்பயன்பாட்டை கண்காணிக்கும். வைஃபை எனப்படும் கம்பியில்லா இணையத் தொடர்பைக் கொண்டு நிகழ்நேரத்தில் மின்பயன்பாட்டையும் அதன் கட்டணத் தொகையையும் மின்திரையில் அது வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
சராசரியாக ஒரு பள்ளியில் 30 முதல் 120 மின்னிணைப்புகள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப இயங்கிக்கொண்டிருக்கும். எனவே, பள்ளியில் இயங்கும் அச்சு இயந்திரம், குடிநீர் விநியோகச் சாதனம், ஒலிஒளிக் கருவிகள் போன்றவை செயல்பாட்டில் இல்லாதபோது, இந்தப் புதிய கருவி அவற்றிற்கான மின்விநியோகத்தை தானாகவே நிறுத்திவிடும். அதன்வழி மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.
வரும் 2031ஆம் ஆண்டுக்குள் கல்வி அமைச்சு, அனைத்து பள்ளிகளின் மின்சார விநியோகத்தை அதன் மத்திய செயல்திட்டப்படி நிர்வகிக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அக்டோபர் மாதம் செய்தி வெளியிட்டிருந்தது. தனிப்பட்ட பள்ளிகள் அவற்றின் மின்சாரப் பயன்பாட்டை நிர்வகிக்கும் தேவை இருக்காது.
ஆள்நடமாட்டத்தைப் பொறுத்து, குளிரூட்டி வசதி, மின்விளக்குகள் தண்ணீர் விநியோகம் போன்றவை கட்டுப்படுத்தப்படும். அதன்வழி உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
இக்கோவோல்ட் கருவியின்மூலம் எட்டு முதல் 20 விழுக்காடுவரை மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்றும் இக்கோவோல்ட் டெக்னாலஜிஸ் இணை நிறுவனர் யூஜின் சியா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு மின்னிணைப்பும் கம்பியில்லா இணையத் தொடர்பின்மூலம் மின்பயன்பாடு, கரிம உமிழ்வு குறித்த அடிப்படைத் தரவுகளைச் சேகரித்து, அதன்பின் மின்பயன்பாட்டை உரிய அளவிற்கு நிலைப்படுத்தத் தொடங்கும்.
செயின்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளியானது கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட 30 இக்கோவோல்ட் மின்னிணைப்புகளை நிறுவத் தொடங்கியதாக அதன் துணை முதல்வர் டேனி டியோ கூறினார். பெரிய வளாகம் என்பதால் மின்சாரச் செலவுகளைச் சேமிக்கும் இலக்குடன் அவை நிறுவப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

