ஊழியர்கள், முதலாளிகளுக்கு ஆதரவளிக்கும் புதிய தேசிய முயற்சியாக ‘கெரியர் ஹெல்த் எஸ்ஜி’ (Career Health SG) என்ற இணையத்தளம் வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பயிற்சியையும் வேலையில் கற்றலையும் தகுந்த இணைப்பில் பெறுவதற்கு உதவும் இத்தளம், ஊழியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பவும், வேலைகுறித்த அறிதலுடன் உறுதியான வேலை மாற்றங்களை மேற்கொள்ள உதவும்.
வேலை, ஊழியரணி திட்டமிடலுக்கு உதவும் வகையில் ஊழியர்கள், முதலாளிகள் இருவருக்கும் கிடைக்கக்கூடிய ஆதரவு நடவடிக்கைகளின் கண்ணோட்டத்தையும் இது வழங்குகிறது.
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நடைபெறும் ‘கெரியர் ஹெல்த்’ உச்சநிலைக் கூட்டம் 2025ன் தொடக்க விழாவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இதனை அறிவித்தார்.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் (டபிள்யுஎஸ்ஜி) சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த இரு நாள் உச்சநிலைக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழில் தலைவர்கள், மனிதவள பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊழியர் பயிற்சி மூலம் முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் திறன்களை அடையாளம் காண முதலாளிகள் சிறந்த இடத்தில் இருப்பதால், நலமான ஊழியரணியை உருவாக்குவதில் முதலாளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று டாக்டர் டான் கூறினார்.
திறனாளர்களை அடையாளம் கண்டு பணியமர்த்தும்போது தகுதிகளைப் பார்ப்பதைவிட, திறனுக்கு முதலாளிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஊழியர்களின் வாழ்க்கைத்தொழில் நலத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலாளிகளுக்கு மூன்று படிநிலைகளை அமைச்சர் டான் முன்வைத்தார்
தொடர்புடைய செய்திகள்
முதலாவதாக, ஆபத்தில் உள்ள வேலைகள், திறன் இடைவெளிகளை மதிப்பிட வேண்டும். அடுத்து, ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் திட்டத்தை வகுக்க வேண்டும். பின்னர் கட்டமைக்கப்பட்ட முன்னேற்றப் பாதை, திறனுக்கு முன்னுரிமை வழங்கும் அணுகுமுறை மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
ஊழியரணியின் திறன் ஆயத்தநிலையை மதிப்பிடுதல், பொருத்தமான பயிற்சிகளை அடையாளம் காணுதல், திறன்களை மேம்படுத்துவதற்கான வேலை மறுவடிவமைப்பு வாய்ப்புகளையும் வழங்குதல் ஆகியவற்றில் முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சு மேலும் வளங்களை இவ்வாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தும் என்று டாக்டர் டான் கூறினார்.
ஊழியர்கள் தங்கள் தொழில் பாதையை வகுக்க சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைவார்கள். அவர்களின் திறன்களை முழுமைப்படுத்த உதவும் திட்டங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்வார்கள்.
“தொழில் நலம் புதிய இயல்பாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. உடல் நலம் போல, இது நமது ஒட்டுமொத்த தொழில் பயணத்திற்கும் நமது வாழ்க்கைக்கும் வணிகங்களுக்கும் மையமாக இருக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் டான்.
மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து ‘தொழில்,வேலைவாய்ப்பு சேவைகள் மேம்பாட்டுக்கான செயற்கூட்டணி’யைத் தொடங்கவுள்ளதாக டாக்டர் டான் கூறினார்.
வேலை தேடுவோரின் வேலைத் திறனை வலுப்படுத்துவது உள்ளிட்ட திறனாளர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்க, தனியார் தொழில், வேலைவாய்ப்புசேவை வழங்குநர்களை கூட்டணி ஒன்றிணைக்கும்.
புதிய வேலை நல எஸ்ஜி இணையத்தளத்தை www.careerhealth.sg என்ற பக்கத்தில் காணலாம்.

