தனியார் துறையினர் தேசிய அடையாள அட்டை எண்களை (NRIC) மறைச்சொற்களாகப் பயன்படுத்தும் நடைமுறையை நிறுத்த வலியுறுத்தும் புதிய வழிகாட்டிக் குறிப்பு வியாழக்கிழமை (ஜூன் 26) வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் துறை நிறுவனங்கள் கூடிய விரைவில் அந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையமும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் அவற்றின் இணையத்தளங்களில் புதிய ஆலோசனைக் குறிப்பைப் பதிவிட்டுள்ளதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் முதல், தனியார் துறை நிறுவனங்களில் அடையாள அட்டை எண்கள் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
நிதி, சுகாதாரப் பராமரிப்பு, தொலைத்தொடர்பு போன்ற துறைகளிலும் அடையாள அட்டை எண்களின் முறையான பயன்பாட்டுக்குரிய வழிகாட்டுதலை அடுத்த சில மாதங்களில் வெளியிடுவதன் தொடர்பில் அரசாங்கம் அவற்றுடன் இணைந்து பணியாற்றுவதாக அமைச்சு கூறியது.
தற்போதைய நிலவரப்படி, தனியார் துறை நிறுவனங்கள் சில ஆவணங்களிலிருந்து ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கு அவரது அடையாள அட்டை எண்ணை மறைச்சொல்லாகப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, காப்பீட்டு ஆவணங்களுக்கு அவ்வாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.
இந்த நடைமுறை பாதுகாப்பானதன்று. ஏனெனில், இதன்கீழ் ஒருவரின் அடையாள அட்டை எண் பிறருக்குத் தெரியவரலாம். மோசடிக்காரர்கள் அதைப் பயன்படுத்தி தனிநபர் தகவல்களைப் பெறமுடியும் என்பதை அமைச்சு சுட்டியது.
தொலைபேசி அழைப்பின் வாயிலாகவோ இணையத்தின் வாயிலாகவோ ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய அவரது அடையாள அட்டை எண்ணைக் கேட்கும் நடைமுறையிலிருந்து இது வேறுபட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய அவரது அடையாள அட்டை எண்ணை முழுவதுமாகவோ அதன் ஒரு பகுதியையோ கேட்கும் நடைமுறையைக் கூடிய விரைவில் நிறுத்தும்படி தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சொன்னது.
மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும் மறைச்சொல் பாதுகாப்புடன் கூடிய ஆவணங்களுக்கு அடையாள அட்டை எண்ணையோ அதன் ஒரு பகுதியைப் பிறந்த தேதியுடன் இணைத்தோ மறைச்சொல்லாக இனி பயன்படுத்தக்கூடாது.
தனிநபர்களை வலுவான மறைச்சொற்களைப் பயன்படுத்தக் கோருதல், பாதுகாப்பு வில்லையைப் பயன்படுத்துதல், கைரேகை அடையாளமுறை போன்றவற்றை நாடும்படி தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் அவை சரியான காரணங்களுக்குப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக அது குறிப்பிட்டது.