தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய அம்சங்களுடன் ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்பு

3 mins read
a2be5348-54e3-4d85-b09c-1d5137ff4b69
சர்ஃபோஜி ராதா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) இருக்கும் சர்ஃபோஜி ராதா, 57, எஸ்ஜி60 கொண்டாட்டத்தை முன்னிட்டு ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளார்.

கடந்த 36 ஆண்டுகளாக சிங்கப்பூர்க் காவல்துறையில் பணியாற்றிவரும் சர்ஃபோஜிக்கு இவ்வாய்ப்பு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

புதிதாகப் பணியில் சேரும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருக்கும் இவருக்கு, சிங்கப்பூரின் எதிர்காலத்தைச் செதுக்கும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருப்பதில் பெருமிதம்.

சர்ஃபோஜியைப்போல இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் முக்கிய அங்கம் வகிக்கவுள்ள ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்பில் 800 பேர் பங்கேற்கவுள்ளனர்.

சிங்கப்பூரில் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு முதன்முதலாக 1969ல் இடம்பெற்றது.

இதற்குமுன் 2019 தேசிய தின அணிவகுப்பின்போது, சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்பு இடம்பெற்றது.

மீண்டும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை சிங்கப்பூரின் 60வது தேசிய தின கொண்டாட்டத்தில் புதிய அம்சங்களுடன் இந்த அணிவகுப்பு களைகட்டும்.

‘நமது பலம், நமது மக்கள், நமது எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நிலம், வானம், நீர்ப்பரப்பில் இந்தச் சிறப்பு அணிவகுப்பு இடம்பெறும்.

புதிதாகச் சேர்க்கப்பட்ட அம்சங்களில் பார்வையாளர்கள் அருகிலிருந்தபடி அணிவகுப்பைப் பார்க்கும் வாய்ப்பும் மரினா பே பகுதியிலிருந்து கடற்படைக் காட்சியமைப்பைக் காணும் வாய்ப்பும் குறிப்பிடத்தக்கவை.

கடற்படைக் காட்சியமைப்பில் முதன்முறையாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் கப்பல்களும் இடம்பெறவுள்ளன.

வழக்கமாக, நிலப்பரப்பில் நடைபெறும் இந்த அணிவகுப்பு செயின்ட் ஆண்ட்ரூஸ் சாலை வழியாகச் செல்லும். இம்முறை பாடாங்கின்மீது வான்வெளிக் காட்சியும் இடம்பெறும். மேலும், மரினா பே பகுதியைச் சுற்றி கடல்சார் காட்சியும் இடம்பெறும்.

பாடாங்கைச் சுற்றி பார்வையாளர்கள் மெய்மறந்து போகும் வண்ணம் பல காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்பு நான்கு அங்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டைப் பாதுகாப்பது அங்கத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் போர்த்திறன் வெளிக்காட்டப்படும். செயலில் நமது பலம் எனும் அங்கத்தில் உள்துறைக் குழு மற்றும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் செயல்பாடுகள் காண்பிக்கப்படும்.

நமது சிங்கப்பூரைப் பாதுகாப்பது எனும் அங்கத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையும், உள்துறை குழுவும் எவ்வாறு கைகோத்து சிங்கப்பூரின் பாதுகாப்புக்குப் பங்களிக்கின்றன என்பது குறித்து காட்சியளிக்கப்படும்.

இறுதியாக, தலைமுறை தலைமுறையாக எனும் அங்கத்தில், பங்கேற்பாளர்களின் கதைகளும் தலைமுறைகளைத் தாண்டிய அவர்களின் அனுபவங்களும் காண்பிக்கப்படும்.

“எனது பணியில் நான் பலமுறை தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளேன். அதற்காக இளைய தலைமுறையினர்க்குப் பயிற்சியளிப்பதில் ஒரு புதுவித அனுபவம் எனக்கு உள்ளது. இளையர்கள் எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்,” என்றார் சர்ஃபோஜி.

நிலம், வானம், நீர் என 170 ராணுவ அம்சங்களைப் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம். அவற்றில் ஆளில்லா வானூர்தியும் இடம்பெறும். இதற்கு முன்னர் ராணுவ அணிவகுப்பில் இடம்பெறாத அம்சங்களும் இந்த ஆண்டு இடம்பெறவுள்ளன.

செயின்ட் ஆண்ட்ரூஸ் சாலை வழியாக ராணுவ வாகன அணிவகுப்பு இடம்பெறும் வேளையில், F-15SG போர் விமானம், C-130 போக்குவரத்து விமானம் பாடாங் முழுவதும் பறப்பதைக் காணலாம்.

இந்தச் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற 200 பேர் கடுமையாக உழைத்து வருவதாகவும் இதில் சவால்மிக்க தளவாடங்கள் அடங்கியுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

“ராணுவ அணிவகுப்பில் இடம்பெறும் வாகனங்களின் தரம் சிறப்பாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 170 ராணுவ அம்சங்கள், நிலம், வானம், நீர் என மூன்று பிரிவுகளில் காட்சியளிக்கப் போவதால் ஒருங்கிணைப்பு மிக முக்கியம்,” என்று கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்புக் குழுவின் தலைவர் மேஜர் டியோ வெய் கோக் கூறினார்.

ராணுவ வாகனங்களின் ஒருங்கிணைந்த அணிவகுப்பில் முக்கியப் பங்காற்றும் மற்றொருவர் தேசிய சேவை புரிந்து வரும் லான்ஸ் கார்ப்பரல் திவியேஷ் ராவ், 19.

முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பிலும் ராணுவ வாகன அணிவகுப்பிலும் பங்குபெறும் திவியேஷ், லெப்பர்ட் 2SG மத்திய போர் பீரங்கியை இயக்கவுள்ளார்.

தேசிய சேவையின்போது அந்த பீரங்கியை இயக்கிய அனுபவம் இருந்தாலும் அணிவகுப்பின்போது பல சவால்களைக் கடந்து திவியேஷ் அதனை இயக்க வேண்டும்.

“அணிவகுப்பின்போது பீரங்கிகள் மூன்று மீட்டருக்குள் மிக நெருக்கமாக இருக்கும். ஆனால், வழக்கமாக அந்த பீரங்கியை இயக்கும்போது நாங்கள் 30 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் இயக்குவோம். இந்த வேறுபாடுதான் சவால்மிக்கது. தெரிவுநிலை, பீரங்கியின் வேகம் போன்றவை அவற்றில் அடங்கும்,” என்றார் திவியேஷ்.

குறிப்புச் சொற்கள்