தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எலித் தொல்லைக்கு எதிராக தேசிய சுற்றுப்புற வாரியம் கடும் நடவடிக்கை

3 mins read
44df5ac2-bad9-4a6b-b3f8-31112fd16bdd
எலித் தொல்லைக்கு எதிராக தேசிய சுற்றுப்புற வாரியம் கடும் நடவடிக்கை. - வரைகலை: பிரஷாந்தி கௌசல்யா

எலிகளின் தொல்லையைக் குறைப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் இணைந்து வணிக வளாக உரிமையாளர்களுக்கு எதிராக இந்த ஆண்டின் முற்பாதியில் கிட்டத்தட்ட 480 நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இது, சென்ற ஆண்டு முற்பாதியில் எடுக்கப்பட்ட 380 அமலாக்க நடவடிக்கைகளை விட அதிகமாகும்.

இவற்றில் ஏறத்தாழ 210 நடவடிக்கைகள் முறையற்ற குப்பைக் கழிவு மேலாண்மைக்காக எடுக்கப்பட்டவை.

எலித் தொல்லையைப் போக்க தேசிய சுற்றுப்புற வாரியம் இன்னும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல், வாரியம் மூன்று முக்கியப் பகுதிகளில் எலிகள் தொடர்பான குறைபாடுகளுக்காக வளாக மேலாளர்கள், உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளது.

2025 முற்பாதியில் எலி பொந்துகளின் சராசரி எண்ணிக்கை ஒவ்வொரு சுழற்சிக்கும் ஏறக்குறைய 5,400ஆகப் பதிவானது.

இந்த எண்ணிக்கை, 2024ல் காணப்பட்ட 2,800 எலி பொந்துகளின் சராசரி எண்ணிக்கையை விட அதிகம்.

இந்த விவரங்களை வாரியம் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அதன் பொதுச் சுகாதாரம், தூய்மை குறித்த தகவல் தாள் ஒன்றில் வெளியிட்டிருந்தது.

புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது இடத்தின் வளாக மேலாளர்கள் அல்லது உரிமையாளர்களே எலித் தொல்லைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வாரியத்தின் பொறுப்பன்று என்றும் வாரியம் சொன்னது.

பெரும்பாலான எலி பொந்துகள் குடியிருப்பு வட்டாரங்களில் கண்டறியப்பட்டதாகவும் வாரியம் தெரிவித்தது.

நீண்டகாலத்திற்கு எலித் தொல்லையைக் குறைக்க அமலாக்க நடவடிக்கைகளை மட்டும் நம்பியிருப்பது போதாது என்றும் நிலையான, பயனுள்ள வழிகளில் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உணவின் ஆதாரங்களையும் தங்குமிடங்களையும் நீக்குவது அவசியம் என்றும் வாரியம் வலியுறுத்தியது.

இதற்கு எலி விஷம், பொறிகளை மட்டும் பயன்படுத்தாமல் முறையான கழிவு மேலாண்மை, நல்ல வீட்டுப் பராமரிப்பு போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து செயல்படுவதில் வாரியம் கவனம் செலுத்தி வருகிறது.

2025 மே மாதத்தில் வாரியம் அதன் கண்காணிப்பு மூலம் அதிக வணிக நடவடிக்கைகள், போதிய குப்பைக் கழிவு மேலாண்மை இல்லாத பகுதியாக அங் மோ கியோ சென்ட்ரலை அடையாளம் கண்டுள்ளது.

தற்போது அங் மோ கியோ உட்பட நான்கு இடங்களை வாரியம் கண்காணித்து வருகிறது. இதர மூன்று இடங்கள் என்னவென்று அமைப்பு குறிப்பிடவில்லை.

நகர மன்றங்கள், அடித்தள ஆலோசகர்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுடன் கைகோத்து வீட்டுப் பராமரிப்பு, குப்பைக் கழிவு மேலாண்மை நடைமுறைகளின் காரணமாக அந்தப் பகுதியில் குப்பைக் கழிவு மேலாண்மை குறைபாடுகளை வாரியம் 60 விழுக்காடு குறைத்துள்ளது.

குப்பை போடுவதை தடுக்க

குப்பை போடும் நடவடிக்கையைத் தடுக்க நிலையான அறிவிப்புப் பலகைகள், கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற அமலாக்க நடவடிக்கைகளை வாரியம் மேம்படுத்தியுள்ளது.

இந்தக் கருவிகளில் காணொளிப் பகுப்பாய்வு வசதிகள் இருக்கும். இது, தொலைநிலை அமலாக்கம், உளவுத் தகவல் சேகரிப்பு, அதிகாரிகளைத் திறமையாகப் பணியமர்த்துவதற்கு உதவும்.

2025 முற்பாதியில் தூய்மைக் குறைபாடுகள் உள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 800 அமலாக்கத் துண்டறிக்கைகளை வாரியம் வழங்கியது.

இதில் ஏறத்தாழ 240 துண்டறிக்கைகள் குப்பை போடும் குற்றங்களுக்காக வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருந்ததால் ஒன்பது மாதக் காலத்தில் குப்பையின் எண்ணிக்கை 45 விழுக்காடு குறைந்துள்ளது.

தற்போது வாரியம் தனக்குக் கிடைத்த பின்னூட்டங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 12 தூய்மைக் குறைபாடுள்ள பகுதிகளைக் கண்காணித்து வருகிறது. அந்த இடங்கள் யாவை என்று அமைப்பு பகிரவில்லை.

இந்நிலையில், உயரமான இடங்களிலிருந்து குப்பைகள் வீசும் புகார்களின் எண்ணிக்கை 2022லிருந்து நிலையாக உள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 28,000 புகார்கள் பதிவாயின.

தூய்மைப் பணிகளை மேம்படுத்தல்

தூய்மைப் பணிகளை மேம்படுத்த நிறுவனங்களுடன் இணைந்து அறிவார்ந்த தீர்வுகளைக் கொண்டுவர வாரியம் முற்படுகிறது.

சுங்கை சிலேத்தார், ரோச்சோர் கால்வாய்களை சுத்தம் செய்ய அறிவார்ந்த வழிகளை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் குப்பைகளைக் கையாளுவதால் உடலுழைப்பைக் குறைக்க, நடைபாதையில் தானாக இயங்கும் துப்புரவு இயந்திரத்தைச் சோதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்