2025 தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையில், அணிவகுப்பின் சடங்கு ஒன்சாங்கி அணியைச் சேர்ந்த 47 வயது பங்கேற்பாளர் உயிரிழந்ததாக தற்காப்பு அமைச்சும் சாங்கி விமான நிலையக் குழுமமும் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை (ஜூன் 21) காலை 11.23 மணிக்கு பாடாங்கில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையின் முடிவில் அந்த ஆடவர் மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக ஒத்திகைத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் கூடத்துக்கு சில நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டார். காலை 11.26 மணிக்கு மருத்துவக் கூடத்தில் பங்கேற்பாளருக்குப் பணியில் இருந்த மருத்துவ அதிகாரி சிகிச்சை அளித்தார்.
பங்கேற்பாளருக்கு உடனடியாக இதயத்தைச் செயல்பட வைக்கும் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அசைவின்றி இருந்த பங்கேற்பாளர், தயார்நிலையில் இருந்த சிங்கப்பூர் ஆயுதப் படை ஆம்புலன்சுக்குப் பின்னர் மாற்றப்பட்டார்.
காலை 11.57 மணியளவில் பங்கேற்பாளர் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், பிற்பகல் 12.19 மணியளவில் அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
பங்கேற்பாளரின் குடும்பத்துடன் சாங்கி விமான நிலையக் குழுமமும் 2025 தேசிய தின அணிவகுப்பு நிர்வாகக் குழுவும் தொடர்பில் உள்ளது. இக்கட்டான இந்தச் சூழலில் அவை குடும்பத்துக்குத் தேவையான முழு ஆதரவை அளிப்பதாகத் தெரிவித்தன.
பங்கேற்பாளரின் குடும்பத்துக்கு அமைப்புகள் இரங்கல் தெரிவித்தன.