மைரிபப்ளிக் சந்தாதாரர்கள் ஸ்டார்ஹப் கட்டமைப்பிற்கு மாற்றப்படவுள்ளனர்

மைரிபப்ளிக் சந்தாதாரர்கள் ஸ்டார்ஹப் கட்டமைப்பிற்கு மாற்றப்படவுள்ளனர்

2 mins read
83133062-bedd-41cd-ab8d-03bbd9a9e6f0
தற்போதைய எம்1 கட்டமைப்பில் இருக்கும் மைரிபப்ளிக்கின் நான்காம் தலைமுறை வாடிக்கையாளர்களை ஸ்டார்ஹப் கட்டமைப்பிற்கு மாற்றுவது புதிய விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஸ்டார்ஹப், மைரிபப்ளிக் நிறுவனங்கள் தங்களின் பங்காளித்துவத்தை விரிவுபடுத்தியுள்ளன. மைரிபப்ளிக் மொபைலின் அனைத்துச் சந்தாதாரர்களையும் ஸ்டார்ஹப் கட்டமைப்பிற்கு மாற்றுவதன் மூலம் அந்த விரிவாக்கம் சாத்தியமானது.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) நிறுவனங்கள் இரண்டும் அதன் தொடர்பில் கூட்டறிக்கையை வெளியிட்டன.

2022ஆம் ஆண்டில் மைரிபப்ளிக் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்ஹப் ஐந்தாம் தலைமுறைக் கட்டமைப்பை வழங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தற்போதைய எம்1 கட்டமைப்பில் இருக்கும் மைரிபப்ளிக்கின் நான்காம் தலைமுறை வாடிக்கையாளர்களை ஸ்டார்ஹப் கட்டமைப்பிற்கு மாற்றுவது புதிய விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மைரிபப்ளிக்கின் சிங்கப்பூர் விரிவலை வணிகத்தை ஸ்டார்ஹப் முழுமையாகக் கைப்பற்றியது.

“சிங்கப்பூரின் தொலைத்தொடர்புச் சந்தையில் நடைபெற்றுவரும் ஒருங்கிணைப்புக்குத் தலைமை தாங்குவதை நோக்கி நாங்கள் மேலும் ஓரடி எடுத்து வைத்துள்ளோம்,” என்று ஸ்டார்ஹப் தலைமை நிர்வாக அதிகாரி நிகில் ஈப்பென் தெரிவித்தார்.

மைரிபப்ளிக் மொபைல் சந்தாதாரர்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்பதைத் தெரிவிக்க ஸ்டார்ஹப் மறுத்துவிட்டது.

வருவாய்ச் சந்தைப் பங்கின் அடிப்படையில் சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய கைப்பேசிச் சேவை நிறுவனமாக ஸ்டார்ஹப் திகழ்கிறது என்பதை அதன் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஸ்டார்ஹப்பின் நான்காம் தலைமுறைக் கட்டமைப்பில் இயங்கிவந்த மற்றொரு கைப்பேசி மெய்நிகர் கட்டமைப்பு நிறுவனமான ரெட்ஒன் ஜூன் 30ஆம் தேதி மூடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்மைத் தகவல் வந்துள்ளது. ரெட்ஒன் வாடிக்கையாளர்கள் ஸ்டார்ஹபின் கைப்பேசி மெய்நிகர் கட்டமைப்பு நிறுவனமான எயிட் டெலிக்காமிற்கு மாற்றப்பட்டனர். சாங்கி விமான நிலையக் குழுமத்தால் நடத்தப்படும் சாங்கி மொபைல் உட்பட ஏழு கைப்பேசி மெய்நிகர் கட்டமைப்பு நிறுவனங்கள் 2020க்கும் 2026க்கும் இடையில் சிங்கப்பூரில் மூடப்பட்டன.

பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்குச் சேவையாற்றச் சிங்கப்பூர்ச் சூழ்நிலையில் கைப்பேசி மெய்நிகர் கட்டமைப்பு நிறுவனங்கள் இன்னமும் முக்கியப் பங்கு வகிப்பதாக ஸ்டார்ஹப் நம்புகிறது.

குறிப்புச் சொற்கள்