சையது ஆல்வி ரோட்டில் உள்ள முஸ்தஃபா சென்டர் கடைத்தொகுதி மின்விற்பனைத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கேற்ப பலவகைப் பொருள்களை விற்கும் முஸ்தஃபா, shopmustafa.sg எனும் அதன் மின்விற்பனைத் தளத்தைக் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. தற்போதைக்கு சராசரியாக சுமார் 200 வெள்ளி மதிப்பிலான பொருள் வாங்குவதற்கான பதிவுகளைத் தாங்கள் கையாள்வதாக முஸ்தஃபாவின் வெளிநாட்டுத் திட்டங்களைக் கையாளும் ரோனி ஃபைஸால் டான்.
தாங்கள் கையாளும் விற்பனைப் பதிவுகளின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.
இச்சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் பலர் பெரிய மின்சாரப் பொருள்கள், ஒரே பதிவில் பலவகையான வீட்டு அத்தியாவசியப் பொருள்கள் போன்றவற்றை வாங்குவதாக திரு டான் தெரிவித்தார். இதுபோன்ற பொருள்கள் இனி இணையத்தில் வாங்கப்பட்டு விநியோகிக்கப்படலாம் என்பது அதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்ற மின்வர்த்தகர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டவாறு தங்களின் இந்தப் புதிய சேவையை நிதி இழப்பின்றி தொடர்வதில் கவனம் செலுத்தப்போவதாக முஸ்தஃபா தெரிவித்தது.
தங்களைப் போன்ற வர்த்தகங்கள் பலவற்றுக்குப் பிறகே தாங்கள் மின்வர்த்தகத்தில் களமிறங்கியிருப்பதை முஸ்தஃபா ஒப்புக்கொண்டது. முஸ்தஃபாவின் மின்விற்பனைத் தளத்தில் தற்போது 3,000 பொருள்கள் விற்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை, உலக நாடுகளிலிருந்து முஸ்தஃபா தருவிக்கும் 500,000 பொருள்களில் ஒரு சிறு பகுதியே ஆகும்.
ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சுமார் 1,000 புதிய பொருள்களை மின்விற்பனைத் தளத்தில் விற்பனைக்கு விடத் திட்டமிடப்பட்டுள்ளது.
மின்விற்பனைத் தளத்தைத் தொடங்குமாறு வாடிக்கையாயர்கள் பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்ததாக முஸ்தஃபா உரிமையாளர் முஸ்டாக் அகமது, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். தங்கள் வர்த்தகத்தை இணையத்திலும் நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவு செய்ததாக திரு முஸ்டாக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைக்கு சுமார் 10 ஊழியர்கள் முஸ்தஃபாவின் இணைய வர்த்தகச் செயல்பாடுகளைக் கையாள ஒதுக்கப்பட்டுள்ளனர்.
அதன் மின்விற்பனைத் தளத்தில் 150 வெள்ளிக்குக் குறைவான பொருள்களை வாங்கும்போது அவற்றை விநியோகிப்பதற்கான கட்டணம் 10 வெள்ளியாகும். 150 வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள பொருள்களை வாங்கும்போது விநியோகக் கட்டணம் கிடையாது.

