பெரியவர்களுக்கான ரயில், பேருந்துக் கட்டணங்கள், பயணம் செய்யும் தொலைவைப் பொறுத்து, 9 அல்லது 10 காசு உயரவிருக்கிறது.
ஒட்டுமொத்தப் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 5 விழுக்காடு உயரவிருப்பதாகப் பொதுப் போக்குவரத்து மன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) தெரிவித்தது. வருடாந்திரக் கட்டண மறுஆய்வுக்குப் பிறகு மன்றம் இந்தத் தகவலை வெளியிட்டது.
இவ்வேளையில், மூத்தோர், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், குறைந்த வருமான ஊழியருக்கான சலுகை விலைக் கட்டணம் 4 காசு வரை உயரும் என்று அது கூறியது.
ஒப்புநோக்க, கடந்த ஈராண்டுகளைவிட இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வு குறைவு. 2023ல் அது 7 விழுக்காடும் 2024ல் 6 விழுக்காடும் உயர்ந்தது.
கட்டண ஒழுங்குபடுத்தலுக்குப் புதிய காலகட்டத்தைப் பயன்படுத்துவதாகக் கூறிய மன்றம், எரிசக்தி விலை, ஊதியம் போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டது. தற்போது ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் மறுஆய்வுக்குக் கருத்தில் கொள்ளப்படுகிறது. இனி, முந்தைய ஆண்டின் ஜூலை முதல் இந்த ஆண்டின் ஜூன் வரை கருத்தில் கொள்ளப்படும்.
டிசம்பர் 27ஆம் தேதி முதல், 17.2 கிலோமீட்டர் வரையிலான பயணத்துக்குக் கட்டணம் 9 காசு உயரும். அதன் பிறகு பயணத்தைத் தொடர்வோர் 10 காசு அதிகம் செலுத்தவேண்டும்.
எடுத்துக்காட்டாக, தானா மேராவிலிருந்து பெருவிரைவு ரயிலில் (எம்ஆர்டி) தஞ்சோங் பகார் செல்லப் பெரியவர்களுக்கான தற்போதைய கட்டணம் $1.93 ஆகும். இனி அந்தப் பயணத்துக்கு (14 கிலோமீட்டர்) $2.02 செலுத்த வேண்டும்.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் சலுகை விலைக் கட்டணம் செலுத்துகின்றனர். அவர்கள், 3.3 கிலோமீட்டர் முதல் 7.2 கிலோமீட்டர் வரை பயணம் செய்வதற்குக் கூடுதலாக 3 காசு செலுத்துவர். 7.2 கிலோமீட்டருக்குமேல் பயணம் செய்தால் 4 காசு கூடுதலாகச் செலுத்துவர்.
தொடர்புடைய செய்திகள்
3.2 கிலோமீட்டருக்கும் குறைவான குறுகிய தொலைவுப் பயணத்துக்குச் சலுகைக் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று மன்றம் கூறியது.
விரைவுப் பேருந்துப் பயணிகளும் கூடுதல் கட்டணம் செலுத்துவர் என்று அது தெரிவித்தது.
மாதாந்திரச் சலுகை அட்டைக்கான கட்டணம் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 5 விழுக்காடு குறைகிறது.
பெரியவர்கள் மாதாந்திரச் சலுகை அட்டைக்கு $122 செலுத்துவர். தற்போது அது $128ஆக உள்ளது. மூத்தோரும் உடற்குறையுள்ளோரும் இனி 3 வெள்ளி குறைவாக $55 செலுத்துவர்.
வேலைநலன் போக்குவரத்துச் சலுகைத் திட்டத்தின்கீழ் குறைந்த வருமான ஊழியர்கள் 4 வெள்ளி குறைவாக $93 செலுத்திக் கட்டண அட்டையைப் பெறுவர்.
இத்தகைய குறைவான கட்டணத்தால் ஏறத்தாழ 155,000 பயணிகள் பயனடைவர் என்று மன்றம் கூறியது.
கட்டண உயர்வைச் சமாளிக்க உதவும் வகையில், ஒரு நபருக்கு மாத வருமானம் $1,800 வரை உள்ள வீடுகளுக்குத் தலா $60 மதிப்புள்ள பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளை அரசாங்கம் வழங்கும் என்று போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் தெரிவித்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பற்றுச்சீட்டு கிடைக்கும். அதை கட்டண அட்டைகளை நிரப்பவோ அல்லது மாதாந்திர அட்டைகளை வாங்கவோ பயன்படுத்தலாம்.
கட்டணங்கள் கட்டுப்படியாக இருப்பதாய் பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்துள்ளது.