மார்சிலிங்-இயூ டீயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், குறிப்பாக மலாய்/முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தோர், வரும் மாதங்களில் கூடுதல் மனநல ஆதரவை எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்த விவகாரம் குறித்து M3@ மார்சிலிங்-இயூ குழு குடியிருப்பாளர்களை ஈடுபடுத்தி வருவதாக தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது சனிக்கிழமை (ஜூன் 28) தெரிவித்தார்.
அன்-நூர் பள்ளிவாசல் உடனான பங்காளித்துவ முயற்சி மூலம் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
‘ஹிஜ்ரா வாக் அண்ட் ஹெல்த் ஃபியேஸ்ட்டா’ நிகழ்ச்சிக்கு இடையே ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அவர், இத்திட்டம் ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் அதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகச் சொன்னார்.
மனநலப் பிரச்சினை அல்லது டிமென்ஷியா பாதிப்புடையவர்களைக் கவனித்துக்கொள்வோருக்குப் போதுமான ஆதரவைப் பெற இயலவில்லை என்று குடியிருப்பாளர்களிடமிருந்து, குறிப்பாக மார்சிலிங்-இயூ டீயில் மலாய்/முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தோரிடமிருந்து கருத்து கிடைத்துள்ளதாக திரு ஸாக்கி கூறினார்.
சுவா சூங் காங் விளையாட்டரங்கில் இஸ்லாமியப் புத்தாண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் திரு ஸாக்கியுடன் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி எம்.பி.க்களான பிரதமர் லாரன்ஸ் வோங், திருவாட்டி ஹனி சோ, திரு அலெக்ஸ் யாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியைச் சேர்ந்த 700க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள், மனநலனுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்த ஒன்றுதிரண்டனர்.
“மனநலன் குறித்து சமூகக் கண்ணோட்டத்துடன் பேசுவது முக்கியம். நம்மைச் சுற்றி எப்போதும் மனநலப் பிரச்சினை இருந்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் குறித்து அதிகம் பேசப்பட்டதில்லை,” என்றார் திரு ஸாக்கி.
தொடர்புடைய செய்திகள்
“அனுபவங்கள், வளங்கள், ஆதரவைப் பகிர்வது மூலம் சமூகத்தை ஒன்றுதிரட்டுவதற்கான ஒரு வழி. மனநலப் பிரச்சினை குறித்து கலந்தாலோசிப்பதற்கான தடைக்கற்களைக் குறைக்க இது உதவும்,” என்றும் அவர் சொன்னார்.