வெளிநாடுகளில் வீடு அல்லது சொத்து வாங்குவோர், குறைந்தபட்சம் அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு சூழலை ஆராய்வது நல்லது. அவற்றின் விலைகளைச் சிங்கப்பூர் விலையோடு ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதேசமயம், வெளிநாட்டுச் சொத்துகளை இங்கிருந்தபடியே வாங்குவது பாதுகாப்பானது என்ற நம்பிகையும் தவிர்க்கப்படவேண்டும். மலிவான விலை என்பதால் அந்த வகை முதலீடுகள் லாபம் ஈட்டும் என்று அவற்றை விற்போர் வழங்கும் உத்தரவாதங்களையும் உண்மை என்று நம்பிவிட முடியாது.
நேரடியாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்று, வாங்க விரும்பும் வீடுகளையோ சொத்துகளையோ பார்வையிடுவது அல்லது ஒரு நிபுணரை நியமித்து அதனை மதிப்பீடு செய்வது சிறந்த செயல்பாடாகும்.
அண்மையில் வெளிநாட்டு சொத்துத் தகராறு சார்ந்த மூன்று வழக்குகள் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டன. கட்டப்படாத வீட்டுத் திட்டங்களில் மோசடிக்கு ஆளானதால் அவற்றை வாங்கியோர் வழக்கு தொடுத்திருந்தனர்.
அந்த மூன்று வழக்குகளிலும் சொத்து வாங்கியோர் சரியான முறையில் தாங்களாகச் சோதனையிடத் தவறினர். விற்பனையாளர்கள் அளித்த பொய்யான தகவல்களை நம்பி, சொத்துகளை அவர்கள் வாங்கிவிட்டனர். இழப்பீட்டிற்கான வழக்கில் வென்று, இழந்த பணத்தை அவர்கள் மீட்டபோதும் பல்லாயிரக்கணக்கில் செலவிட்டு வழக்கறிஞர்களை நியமித்துத்தான் முதலீட்டைத் திரும்பப் பெற முடிந்தது. அதனால் தேவையற்ற பணச்செலவும் காலவிரயமும் ஏற்பட்டது.
வெளிநாடுகளில் நிலவரத்தை நன்கு புரிந்துகொண்டு முடிவுகளை எடுப்பது சிறந்ததாகும். விற்பனையாளர்கள் வழங்கும் புள்ளிவிவரங்களை உடனே நம்பிவிடக்கூடாது. சிங்கப்பூரின் சொத்து விலைகளை வெளிநாட்டு சொத்து விலைகளுடன் ஒப்பிடுவதும் தவறாகும். வெளிநாட்டுச் சொத்து விற்பனையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நாடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் ஒரு தம்பதி, இரு நாடுகளில் $800,000க்கு 16 சொத்துகளை வாங்கி ஏமாறியது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தில் $200,000க்கு மூன்று வீடுகளையும், பிரேசிலில் $600,000க்கு 13 வீடுகளையும் வாங்கியதாக அவர்கள் எண்ணிய நிலையில், பிறகு அத்தகைய வீடுகளே அங்கு இல்லை என்பது கண்டறியப்பட்டது. விற்பனை முகவர்கள் போன்ற இரு மோசடிக் கும்பல்கள் அவர்களை ஏமாற்றிவிட்டன.