ஊட்ரம் பார்க்கில் அமைக்கப்படவுள்ள சுகாதார அமைச்சின் புதிய அலுவலகம், அந்த அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் கூடுதலானோர்க்கு இடமளிக்கும்.
இந்தக் கட்டடம், அமைச்சின் புதிய தலைமையகமாகச் செயல்படக்கூடும்.
மெக்கெலிஸ்தர் ரோட்டில் அமையவுள்ள இந்தப் புதிய அலுவலகம், சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை வளாகத்தில் இடம்பெறும்.
சுகாதார அமைச்சைச் சார்ந்துள்ள அமைப்புகள் சிங்கப்பூரிலுள்ள பல்வேறு இடங்களில் தற்போது உள்ளன. இவையெல்லாம் ஒரே கூரையின்கீழ் கொண்டுவரப்படும் என்று அமைச்சின் பேச்சாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் மே 30ஆம் தேதி தெரிவித்தார்.
தேசிய நினைவுச் சின்னமாகத் திகழும் மருத்துவக் கல்லூரியில் தற்போது தளம் கொண்டுள்ள சுகாதார அமைச்சின் தலைமையகம், புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் இடம்பெறுகிறது.
நகர மறுசீரமைப்பு ஆணையத்திடமிருந்து வெளியிடப்பட்ட அண்மை பொது ஆவணங்களிலிருந்து தெரியவந்த, சுகாதாரம் தொடர்பான இரண்டு கட்டட மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தப் புதிய அலுவலகம் ஒன்று.
மற்றொரு கட்டுமானத் திட்டம், பாய லேபார் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே அமையவுள்ள புதிய சுகாதாரப் பராமரிப்பு வசதியை அமைப்பதற்குரியது.
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையிலுள்ள புதிய அலுவலகக் கட்டடத்திற்கு 55,442 சதுர மீட்டர் இடமும் சில்லறை வர்த்தகங்களுக்கு 352 சதுர மீட்டர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
புதிய கட்டடத்திற்கான தளம், ஏறத்தாழ மூன்று காற்பந்துத் திடல்களுக்கு ஈடாக 20,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.
தேசிய சின்னங்களாக உள்ள மருத்துவக் கல்லூரிக் கட்டடத்திற்கும் டான் டெக் குவான் கட்டடத்திற்கும் இந்தப்பகுதி இடமளிக்கிறது.
மீட்பு ஹெலிகாப்டர்களுக்குத் தரையிறங்கும் திடலின் ஒரு பகுதியும் சிங்கப்பூரின் முதல் மருத்துவப் பள்ளி மாணவர்களுக்கான இளைப்பாறும் வசதியும் இங்கு உள்ளன.
புதிய கட்டடத்தின் கூறுகளும் கட்டுமானத் திட்டத்திற்கான காலக்கெடுவும் தொடர்ந்து உறுதிசெய்யப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சின் பேச்சாளர், கூடுதல் விவரங்கள் பிறகு வெளியிடப்படும் என்றார்.

