தமிழுக்கு முஸ்லிம் சமூகம் அரும்பங்கு: அமைச்சர் சண்முகம்

3 mins read
7414a565-74ca-44ff-9b0f-997f903643ec
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மேடையில் (இடமிருந்து) சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜா முகம்மது, தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம், எம்இஎஸ் நிறுவனர் எம். அப்துல் ஜலீல், நூல் எழுத்தாளரும் மூத்த கல்வியாளருமான மு.அ.மசூது, முன்னாள் மூத்தத் துணையமைச்சர் சைனுல் அபிதின் ரஷீத்.  - படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூரில் தமிழ் குறிப்பிடத்தக்க நிலையில் இருப்பதற்குத் தமிழைத் தாய்மொழியாக இடம்பெறச் செய்யும் அரசாங்கக் கொள்கைகள் ஒரு காரணமாக இருந்தாலும் சமூக முயற்சிகளுக்கும் அதில் பங்குண்டு என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

“சமூக முயற்சிகளைப் பார்த்தோமெனில் எழுத்தாளர்கள், எழுத்துலக வல்லவர்கள், பதிப்பாளர்கள், அவற்றை ஆதரிக்கும் அமைப்புகள் என அனைத்திலுமே தமிழ் முஸ்லிம்கள் அரும்பங்கு வகிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சனிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற எம்இஎஸ் நிறுவனர் அப்துல் ஜலீலின் வாழ்க்கை அனுபவத் திரட்டான ‘சிகரம் தொட்ட சிங்கப்பூர் சீதக்காதி’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசியபோது திரு சண்முகம் இவ்வாறு கூறினார்.

தமிழ் முரசின் உருவாக்கத்திற்கு கோ சாரங்கபாணியுடன் தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் முக்கியப் பங்காற்றியதைக் குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றார்.

“அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் திரு ஜலீல், தமிழ் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஆதரிக்கும் ஊற்றாகத் திகழ்கிறார்,”என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சி மேடையிலும் திரு ஜலீலைப் பாராட்டிய அமைச்சர் சண்முகம், இந்நாட்டின் எழுத்துத் தமிழுக்கு அவர் ஆற்றிய பெருந்தொண்டைக் குறிப்பிட்டார்.

திரு ஜலீலின் கதையை பரந்த சிங்கப்பூர்ச் சமூகத்திற்கு சேர்க்கும் மற்றொரு வழியாக ‘சிகரம் தொட்ட சிங்கப்பூர் சீதக்காதி’ எனும் நூல் திகழ்வதாகத் திரு சண்முகம் குறிப்பிட்டார். 
திரு ஜலீலின் கதையை பரந்த சிங்கப்பூர்ச் சமூகத்திற்கு சேர்க்கும் மற்றொரு வழியாக ‘சிகரம் தொட்ட சிங்கப்பூர் சீதக்காதி’ எனும் நூல் திகழ்வதாகத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.  - படம்: பே. கார்த்திகேயன்

“திரு ஜலீலின் வாழ்க்கையைப் பார்க்கும்போது இளையர்களுக்கும் பெரியவர்களுக்கும் நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. அவர் கடுமையாக உழைத்து தன் முயற்சியால் முன்னேறியவர்; தாம் முன்னேறிய பிறகு மற்றவர்களை மறக்காது அவர்களுக்கு வள்ளலாக வாரி வாரிக் கொடுத்தவர்,” என்றார் திரு சண்முகம். 

ஊழியர்களுக்கான தங்குவிடுதைகளை அமைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய திரு ஜலீல், தாம் செய்யும் உதவியை விளம்பரப்படுத்துபவர் அல்லர் என்று திரு சண்முகம் குறிப்பிட்டார். 

“இந்த மாதிரியான மனிதர்தான் நாட்டைச் செழிப்பாக, வளமாக நடத்திவர முன்னோடித் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களே சமூகத்திற்கு மிகப பெரிய உதாரணங்கள் எனக் கூறலாம்,” என்றார் திரு சண்முகம். 

திரு ஜலீலின் கதையை பரந்த சிங்கப்பூர்ச் சமூகத்திற்கு சேர்க்கும் மற்றொரு வழியாக இந்நூல் திகழ்வதாகத் திரு சண்முகம் கூறினார். 

சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் 10வது நூல் வெளியீடான இந்தபஇருமொழி புத்தகம், திரு ஜலீலின் பாதையில் செல்ல மேலும் பலரை ஊக்குவிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

“சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கிற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அதன் பத்தாவது வெளியீடான இந்நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மொழி, பண்பாட்டை மேம்படுத்துவதுடன் சமூக நலனைச் சீர்தூக்கி, தொண்டு மனப்பான்மையை அந்த அமைப்பு வளர்ப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், புத்தகம் எழுதிய மூத்த கல்வியாளர் மு.அ. மசூதிற்குத் தமது சிறப்புப் பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார்.

சிங்கப்பூர்ச் சமுதாயத்தையும் உலகத்தையும் நேசித்த அருமையான மனிதரின் வரலாறு பற்றியது இந்நூல் என நெகிழ்ந்துரைத்த திரு மசூது, அதில் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளையர்களுக்கு நிறைய படிப்பினைகள் உள்ளதாகக் கூறுகிறார்.

“சிங்கப்பூர் பல சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட ஜலீல் அவர்களுடைய வாழ்க்கையும் அப்படித்தான். ஆகவே சிங்கப்பூர் வரலாறு கிட்டத்தட்ட ஜலலீலுடைய வரலாறு, அவரைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் இதுதான்,” என்று அவர் கூறினார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்