தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
நாட்டிலும் வட்டாரத்திலும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்வதால் விழிப்புடன் இருக்க பொதுமக்களை அமைச்சு கேட்டுக்கொண்டது

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு உள்துறை அமைச்சு அறிவுறுத்தல்

2 mins read
d00374f5-46e0-4238-9a4d-105a641e857d
சிங்கப்பூருக்கு குறிப்பிட்ட அல்லது உடனடியாக நிகழக்கூடிய அச்சுறுத்தல் தற்போது இல்லை என்றாலும், நாட்டுக்கும் வட்டாரத்துக்கும் பயங்கரவாத மிரட்டல் அதிகமாக உள்ளது என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.  - கோப்புப் படம: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருந்து, சந்தேகத்திற்கிடமானவர்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து அறியப்பட்டால், அவர்கள் உள்ளூரில் இருந்தாலும் அல்லது வெளிநாடுகளில் இருந்தாலும் உடனடியாகக் காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்துள்ளது.

இந்தோனீசியாவின் பாத்தாம் தீவு உட்பட தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திற்குள் தீவிரவாதக் குழுக்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இந்தோனீசியக் காவல்துறை விழிப்பு நிலையில் இருப்பதாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி வெளியிட்டது. அதுகுறித்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்துள்ளது.

சிங்கப்பூர் பாத்தாமிலிருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் அல்லது 50 நிமிட படகு சவாரி தொலைவில் உள்ளது.

சிங்கப்பூருக்கு, குறிப்பிட்ட அல்லது உடனடியாக நிகழக்கூடிய அச்சுறுத்தல் தற்போது இல்லை என்றாலும், நாட்டுக்கும் வட்டாரத்துக்கும் பயங்கரவாத மிரட்டல் அதிகமாக உள்ளது என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ஐஎஸ்ஐஎஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாதக் குழுக்களால் தொடர்ந்து ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவையே இதற்குக் காரணம்.

“பயங்கரவாத அச்சுறுத்தலின் நாடு கடந்த தன்மையைக் கருத்தில் கொண்டு, தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்கவும் இந்தோனீசிய சகாக்கள் உட்பட வெளிநாட்டு உளவுத்துறை, தற்காப்புப் பங்காளிகளுடன் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நெருக்கமாக ஒத்துழைக்கிறது,” என்று அமைச்சு கூறியது.

பாத்தாம் குடிநுழைவு அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன், குடிநுழைவுச் சாவடிகளில் கடுமையான கண்காணிப்பு போன்ற பல தடுப்பு நடவடிக்கைகளில் பயங்கரவாத எச்சரிக்கை எதிரொலித்ததாக பாத்தாம், ரெம்பாங், கலாங் (பரேலாங்) நகர காவல்துறை தலைவர் ஜைனல் அஃர்பின் தெரிவித்ததாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி குறிப்பிட்டது.

எனினும் குறிப்பிட்ட அச்சுறுத்தல் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்றது அது.

அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள காவல் துறையினருடன் இணைந்து தேசிய காவல்துறைத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள ஒத்துழைப்பு முயற்சிகள் மூலம் நாட்டின் காவல்துறையினர் இணைந்து செயல்படுவதாகவும் திரு ஜைனல் அஃர்பின் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு https\:\\www.sgsecure.gov.sg என்ற எஸ்ஜிசெக்யூர் இணையத்தளத்துக்குச் செல்லுமாறு பொதுமக்களை உள்துறை அமைச்சு அறிவுறுத்தியது. ஒருவர் தீவிரவாத சிந்தனைக்கு ஆட்பட்டுள்ளார் என்பதை அறிந்தாலோ அல்லது சந்தேகித்தாலோ அல்லது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் அல்லது தீவிரவாத போதனைகளைப் பரப்புகிறார் என்று அறிந்தாலோ உடனடியாக 1800-2626-473 என்ற எண்ணில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைத் தொடர்புகொள்ள வேண்டும்.

குறிப்புச் சொற்கள்