பேரங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்களின் அடிப்படை விலையைக் காட்டும் முன்னோடித் திட்டமொன்று அறிமுகம் காண்கிறது. பயனீட்டாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருள்களை வாங்க அது உதவியாக இருக்கும். முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் தேதியிலிருந்து டிசம்பர் 26ஆம் தேதி வரை சோதித்துப் பார்க்கப்படும்.
ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், பிரைம் சூப்பர்மார்க்கெட், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் முதலிய முக்கியப் பேரங்காடிகளின் 150க்கும் மேற்பட்ட கிளைகள் திட்டத்தில் பங்கெடுக்கின்றன. அரிசி, இறைச்சி, கடலுணவு, பால்மாவு போன்றவை அத்தியாவசியப் பொருள்களில் அடங்கும்.
எடுத்துக்காட்டாக, அரிசி, சிறாருக்கான பால்மாவு போன்றவற்றின் விலை ஒரு கிலோகிராமுக்கு அல்லது ஒவ்வொரு 100கிராமுக்கும் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன் தொடர்பில் சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்துடனும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்துடனும் பேரங்காடிகள் உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளன.
பொருள்களின் விலை இன்னும் வெளிப்படையாகத் தெரியவேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம். பயனீட்டாளர்கள் விலையை ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொண்டு பொருள்களை வாங்க இது கைகொடுக்கும் என்று ஆணையமும் சங்கமும் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.
ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், பிரைம் சூப்பர்மார்க்கெட் ஆகியவை முன்னோடித் திட்டத்தை அடுத்த மாதத்திலிருந்து அக்டோபர் 26ஆம் தேதி வரை சோதித்துப் பார்க்கவிருக்கின்றன. கோல்ட் ஸ்டோரேஜிலும் ஜயன்ட்டிலும் அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 26ஆம் தேதி வரை திட்டம் நடப்பிலிருக்கும்.
அந்தக் காலக்கட்டத்தில் ஆணையத்துடன் செயல்படும் விளம்பர, விற்பனைக் கருத்தாய்வு நிறுவனம் பேரங்காடிகளின் பயனீட்டாளர்களிடம் கருத்துகளைத் திரட்டும். அவர்களிடம் அடிப்படை விலையைக் காட்டும் முறையை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதன் தொடர்பில் கருத்துகள் திரட்டப்படும்.