மரினாவில் ஆரோக்கியத்துக்கென சிங்கப்பூரின் முதல் சுற்றுலாத் தலம்

2 mins read
9779bf5e-7b4e-4d78-8805-3d9077137141
‘தெர்ம் சிங்கப்பூர்’ என அழைக்கப்படும் சுற்றுலாத் தலத்தின் மாதிரிப் படம். திறக்கப்பட்டதும் ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் வருகையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். - படம்: ‘தெர்ம் சிங்கப்பூர்’ மற்றும் ‘டிபி’ கட்டடக் கலை வடிவமைப்பாளர்கள்

உடலும் மனமும் இயற்கையோடு இணைந்து அமைதியடைய ஆரோக்கியத்துக்கெனவே கட்டப்படும் சிங்கப்பூரின் முதல் சுற்றுலாத் தலம் மரினா கிழக்கில் அமையவிருக்கிறது.

அனைத்துவித உடல்நலன் சார்ந்த வசதிகளுடன் ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் வருகையாளர்களை எதிர்பார்க்கும் ‘தெர்ம் சிங்கப்பூர்’ என அழைக்கப்படும் மகிழ்விடம் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும். வெப்பமான நீர்க்குளங்கள், சறுக்குகள், கேளிக்கை வசதிகள் என பல புத்தம் புதிய ஏற்பாடுகளை அங்கு அனுபவிக்கலாம்.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் (STB) இந்தத் திட்டத்துக்கான $1 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தக் குத்தகையை வெளியிட்டிருந்தது. அதனைத் தாம் பெற்றுள்ளதாக தெர்ம் குழுமம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) அறிக்கை வெளியிட்டுள்ளது.

கரையோரப் பூந்தோட்டங்கள் மற்றும் மரினா அணைக்கட்டு அருகே நான்கு ஹெக்டர் நிலப்பரப்பில் திட்டம் அமையவுள்ளது. திட்டத்தை ஏற்றுள்ள தெர்ம் குழுமம், அனைத்துலக அளவில் உடல்நலன் சார்ந்த பராமரிப்புக்கான பல சுற்றுலாத் தலங்களை ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் கட்டமைத்து, மேம்படுத்தி நிர்வகித்து வருகிறது.

ஒப்பந்தம் பற்றி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் அதன் ஆய்வுகளில் எவ்விதக் குறைபாடுகளையும் கண்டறியவில்லை என்று தெரிவித்துள்ளது. தெர்ம் குழுமமும் தாம் போதிய நிதி இருப்புகளுடன் செயல்படுவதை உறுதிசெய்துள்ளது.

பச்சைப் பூங்கொடிகள், மலர்வனங்கள் நிறைந்த சூழலில், வெப்பநீர்க் குளங்களும் உலகத் தரம் வாய்ந்த கலை அம்சங்களும், அதிநவீன தொழில்நுட்பமும் ஒரே கூரையின்கீழ் வழங்கி வருகையாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே திட்டம் என்று தெர்ம் குழுமம் விளக்கியுள்ளது.

குடும்பங்கள், பிள்ளைகள், பெரியோர்கள், வேலைசெய்வோர்கள் என பலதரப்பட்ட மக்களை அந்தத் திட்டம் சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வருகின்ற 2040ஆம் ஆண்டுக்குள் 47 முதல் 50 பில்லியன் மதிப்புள்ள வரவை சுற்றுலாத்துறை எட்டும் என்று சிங்கப்பூர் எதிர்பார்க்கிறது. மக்கள் ஆரோக்கியத்துக்காகவே கட்டப்படும் முதல் சுற்றுலாத் தலம் அதற்கு உதவும் என்பது நம்பிக்கை.

குறிப்புச் சொற்கள்