தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

600,000 வருகையாளர் தரவுகள் கசிவு: மரினா பே சேண்ட்சுக்கு $315,000 அபராதம்

2 mins read
62a59e57-684a-4c53-b031-2d38df60307e
மரினா பே சேண்ட்சின் 665,495 வருகையாளர்களின் தரவுகள் சட்டவிரோதமாக, அச்சுறுத்தலுக்குரிய தெரியாத தரப்பினால் கையாளப்பட்டதாக ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈராண்டுகளுக்கு முன்னர் 600,000க்கும் மேற்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஊடுருவப்பட்ட சம்பவத்தின் தொடர்பில், மரினா பே சேண்ட்சுக்கு (எம்பிஎஸ்) தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் $315,000 அபராதம் விதித்துள்ளது.

இது, 2018ஆம் ஆண்டில் நோயாளியின் தரவுகளைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார தகவல் அமைப்புக்கு (ஐஎச்ஐஎஸ்) $750,000 அபராதம் விதிக்கப்பட்டதன் பிறகு, தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விதித்திருக்கும் இரண்டாவது மிக அதிகமான அபராதத் தொகையாகும்.

திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, 2022 அக்டோபர் முதல் $10 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர வருமானம் கொண்ட ஒரு நிறுவனம் தரவுக்கசிவு குற்றத்திற்கு எதிர்கொள்ளக்கூடிய அதிகபட்ச அபராதம் அதன் வருவாயில் 10 விழுக்காடு அல்லது $1 மில்லியன் ஆகும்.

வருகையாளர்களின் பெயர்கள், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊடுருவப்பட்ட தரவுகள், பின்னர் சட்டவிரோதச் செயல்களுக்கான தளங்களில் விற்பனைக்கு விடப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

தரவுக்கசிவு 2023ஆம் ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்தது. மரினா பே சேண்ட்சின் 665,495 வருகையாளர்களின் தரவுகள் சட்டவிரோதமாக, அச்சுறுத்தலுக்குரிய தெரியாத தரப்பினால் ஊடுருவப்பட்டதாக ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்தது.

2023 மார்ச் மாதம் இடம்பெற்ற பெரிய அளவிலான மென்பொருள் மாற்றத்தின்போது, தன் வசமிருந்த தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க ‘நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளை’ எடுக்க எம்பிஎஸ் தவறிவிட்டது என்று ஆணையம் கூறியது.

பழைய மென்பொருளிலிருந்து புதிய ஒன்றுக்கு மாறும்போது அதன் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், அதன் ‘கலைஅறிவியல் நண்பர்கள்’ (ArtScience Friends) வலைப்பக்கம் அந்த மாற்றத்தின்போது விடுபட்டுள்ளது. அதனால் அச்சுறுத்தலுக்குரிய வெளித்தரப்பு, தனிப்பட்ட தரவுகளை ஊடுருவ முடிந்துள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

“ஆறு மாத காலத்துக்கு விடுபடுதலை கண்டுபிடித்துச் சரிசெய்ய எம்பிஎஸ் தவறிவிட்டது, அதன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பின்றி விட்டுவிட்டது.

“சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க வருவாய் கொண்ட ஒரு பெரிய நிறுவனமாக, எம்பிஎஸ் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கத் தேவையான வளங்களைக் கொண்டிருந்தது.

“இத்தகைய தரவு ஊடுருவல்கள் மோசடிக்குப் பயன்படுத்தப்படலாம்,” என்று ஆணையம் கூறியது.

மரினா பே சேண்ட்சின் வருவாய் 83 விழுக்காடு உயர்ந்து 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் $965 மில்லியனை எட்டியது.

குறிப்புச் சொற்கள்