சாங்கி விமான நிலையத்துக்கும் தானா மேரா படகு முனையத்துக்கும் (டிஎம்எஃப்டி) இடையே இணைப்புப் பேருந்துச் சேவை வழங்கப்படுகிறது.
அந்த இணைப்புச் சேவையின் மூலம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் போக 12லிருந்து 24 நிமிடங்கள் ஆகும். சாங்கி விமான நிலையக் குழுமமும் டிஎம்எஃப்டியை நடத்தும் சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் நிலையமும் (Singapore Cruise Centre) சேர்ந்து இந்த இணைப்புப் பேருந்துச் சேவையை வழங்குகின்றன.
இம்மாதம் இரண்டாம் தேதியன்று எட்டு மணிநேரத்தில் பெரிய பெட்டிகளை வைத்திருந்த 32க்கும் அதிகமான பயணிகள் டிஎம்எஃடிக்கோ சாங்கி விமான நிலையத்துக்கோ இணைப்புப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தாததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கவனித்தது. அதேவேளை, ஐவர் சாங்கி விமான நிலையத்துக்கு அந்தப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தியதையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.
அப்பயணிகளில் 17 பேர் இந்தோனீசியாவின் பிந்தான், பாத்தாம் தீவுகளில் வசிப்பவர்கள். மற்றவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள்.
விமான நிலையத்துக்குச் செல்வதற்கான இணைப்புப் பேருந்துச் சேவை சீரற்ற நேர இடைவெளிகளில் இயங்குவதாக சில பயணிகள் கூறினர். அதேநேரம், டிஎம்எஃப்டிக்கும் சாங்கி விமான நிலையத்துக்கும் இடையிலான தூரம் குறைவாக இருப்பதால் இரண்டுக்கும் இடையே பயணம் மேற்கொள்ள டாக்சி ஓட்டுநர்கள் தயங்குவதாகவும் சில பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை 13 முறை இணைப்புப் பேருந்துச் சேவை இயங்குகிறது.
ஆகாய-நீர்ப் போக்குவரத்துச் சேவைகளுக்கு இடையிலான இணைப்புச் சேவையை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக சாங்கி விமான நிலையக் குழுமம் கடந்த மே மாதம் 14ஆம் தேதி தெரிவித்தது. புதிதாகக் கட்டப்பட்டுவரும் ஐந்தாம் முனையம் வாயிலாக அச்சேவையை வழங்கத் தாங்கள் ஆலோசித்து வருவதாக குழுமம் கூறியது.
சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்திலிருந்து டிஎம்எஃப்டிக்கு குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்காதபடி இணைப்புச் சேவை வழங்கப்படலாம் என்று குழுமம் தெரிவித்தது. அப்படியென்றால் இரண்டு எல்லைகளுக்கும் பயணிகள் ஒருமுறை குடிநுழைவுச் சாவடிகளைக் கடந்தால் போதும்.
தொடர்புடைய செய்திகள்
குடிநுழைவுச் சோதனையில்லாத ஆகாய-நீர்ப் போக்குவரத்து இணைப்புச் சேவை, வட்டாரப் போக்குவரத்து, சுற்றுப்பயண முனையம் என்று சிங்கப்பூருக்கு உள்ள நற்பெயரை வலுப்படுத்தும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். சவால்கள் இருந்தாலும் ஆகாய-நீர்ப் போக்குவரத்து இணைப்புச் சேவை, இவ்வட்டாரத்திலிருந்து கூடுதல் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பது போன்ற நன்மைகளை அளிக்கும் என்பது அவர்களின் கருத்து.