ஒரு போலி சொத்து முதலீட்டுத் திட்டம் மூலம் தம் மனைவியின் முன்னாள் காதலனை $220,000 ஏமாற்றுவதற்காக, அவருடன் சேர்ந்து சதி செய்த ஆடவருக்கு வியாழக்கிழமை (ஜூலை 24) ஈராண்டு, நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட திரு டேவிட் டானுக்கு $10,000 திரும்பச் செலுத்திய எரிக் ஓங் சீ வெய், இழப்பீடாக $210,000 செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. ஓங், 50, இந்தத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக 105 நாள்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
அவருடைய மனைவி ஃபெலிஷா டே பீ லிங், 49, ஓங்கின் அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்டவர். அவருக்கு வியாழக்கிழமை ஈராண்டு, ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் நடந்த நேரத்தில், 48 வயதான திரு டானுடன் டே கள்ளத்தொடர்பு வைத்திருந்தது ஓங்கிற்குத் தெரியாது. இருப்பினும் ஓங், டேயின் கணவர் என்பது திரு டானுக்குத் தெரிந்திருந்தது. ஓங், டே இருவரும் ஏமாற்றுக் குற்றச்சாட்டை ஜூன் மாதம் ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் இன்னும் கணவன் - மனைவியாகவே உள்ளனர் என்று தற்காப்பு வழக்கறிஞர் நெவின்ஜித் சிங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நேற்று தலா $40,000 பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தண்டனையை ஆற்றத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

