சிறார்களைப் பாலியல் ரீதியாகக் காண்பிக்கும் 178 காணொளிகளையும் 153 படங்களையும் வைத்திருந்த ஆடவர் ஒருவருக்கு ஓராண்டு ஒன்பது மாதச் சிறைத்தண்டனையுடன் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
26 வயது கான் சீ சுவானுக்கு நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (ஜூன் 19) இந்தத் தண்டனையை விதித்தது.
மறைவான, எளிதில் புக முடியாத இணையத்தளங்களுக்குச் சென்று கான், இந்த ஆபாசப் படைப்புகளைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்.
கானின் குற்றங்கள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தன என்பது நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை. 2023 ஆகஸ்ட் மாதம் கானின் வீட்டில் காவல்துறை நடத்திய சோதனையின்போது அவர் பிடிப்பட்டார்.
சிறார்களைப் பாலியல் ரீதியாகச் சித்திரிக்கும் படைப்புகளைத் தன்வசம் வைத்திருந்ததன் தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை அவர் ஒப்புக்கொண்டார்.
2015ல் இந்த ஆபாசப் படைப்புகளைப் பற்றி இணையத்தளம் ஒன்றின்வழி தெரிந்துகொண்ட கான், 2021 வரை அத்தகைய படைப்புகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
பல்கலைக்கழகம் ஒன்றில் கான் தம் இடத்தை இழந்துவிட்டதாக அவரது தற்காப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அது குறித்த மேல் விவரங்கள் அறியப்படவில்லை. அத்துடன், தன் செய்கை குறித்து கான் மிகவும் வருத்தப்படுவதாகவும் வழக்கறிஞர் கூறினார்.