சிங்கப்பூரில் காதலியின் மரணம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்ததற்காகவும் போக்குவரத்துக் குற்றங்களுக்காகவும் 34 வயது ஆடவருக்கு மூன்று மாத, ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதலியின் உடலைப் பார்த்திருந்தபோதும் அதுகுறித்து அதிகாரிகளிடம் கூறாதது, நீதிக்குத் தடையாக இருந்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஜேசன் ஹோங் காய் சி என்ற ஆடவர் எதிர்கொண்டார்.
போக்குவரத்துக் குற்றத்துக்காகவும் ஹோங்கிற்கு $1,000 அபராதத்துடன் வாகனம் ஓட்டுவதற்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, ஹவ்காங் அவென்யூ 7ல் உள்ள ரிவர்ஃப்ரண்ட் ரெசிடண்சஸ் கூட்டுரிமை வீட்டில் ஹோங், தமது காதலி பேச்சு மூச்சின்றி படுக்கையில் கிடந்ததைக் கண்டார்.
ஏப்ரல் 23ஆம் தேதி மாலை 4.10 மணியளவில் ஹோங், பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.
படுக்கையிலிருந்த பெண்ணை அழைத்த ஹோங், அவர் மூச்சுவிடுவதைக் கேட்டதுடன் அவரது வாயிலிருந்து நுரை வருவதைக் கண்டார்.
முதலுதவி செய்து பெண்ணைக் காப்பாற்ற முற்பட்ட ஹோங்கின் முயற்சி பலனளிக்கவில்லை. அதையடுத்து பெண்ணின் மரணம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்குப் பதிலாக ஹோங் தமது உடைமைகளை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வீட்டில் நுழைவதற்குப் பயன்படுத்தப்படும் அட்டையை வெளியில் இருந்த காலணிக்கான இடத்தில் வைத்துச் சென்றார்.
நான்கு மணி நேரம் கழித்து காதலியைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஹோங், காதலியின் சகோதரியிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
2024, ஏப்ரல் 27ஆம் தேதி சகோதரி காதலியின் வீட்டிற்குச் சென்றபோது பெண்ணின் உடல் அழுகியிருந்த நிலையில் காணப்பட்டது. பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.
2022ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அப்பர் சிராங்கூன் சாலையில் வாகனம் ஓட்டிய ஹோங் தமக்கு முன்பிருந்த டாக்சி மீது மோதிவிட்டு அந்தப் பழியைத் தமது நண்பரை ஏற்கும்படி கூறினார்.
ஆனால், வாகனத்தில் பதிவான காணொளியில் காரில் அப்போதிருந்த நபர் ஹோங் மட்டும்தான் என்பது நிரூபணமானது.

