போர்ச்சுகலின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள காம்பன்ஹா பகுதியில் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த விபத்தில் 59 வயது கணவர் ஒருவர் உயிரிழந்தார்.
கணவர் தரையில் படுத்திருந்தபோது, படுக்கையில் இருந்து எழுந்த அவருடைய 60 வயது மனைவி கால் இடறி அவர் மீது விழுந்தார்.
100 கிலோவுக்கு மேல் எடையுள்ள மனைவி எதிர்பாராதவிதமாக விழுந்ததில், கணவர் படுக்கைக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி நகர முடியாமல் தவித்தார்.
அவர் மனைவி, அளவுக்கு அதிகமான உடல் எடையால் சுயமாக எழ முடியாமல் உதவிக்குக் கூக்குரல் இட்டார்.
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மனைவியை தூக்கி மீட்டனர். ஆனால், அதற்குள் கணவர் சுயநினைவை இழந்தார்.
தீயணைப்பு வீரர்களும், துணை மருத்துவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும், அவர்கள் ஆடவரை மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
இந்தத் துயர்மிகு சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர, மனைவி தற்போது உளவியல் ஆலோசனையைப் பெற்று வருகிறார்.