ஈசூன் அவென்யூ 6ல் அமைந்துள்ள புளோக் 467Bன் கீழ்த்தளத்தில் கூரான பொருளைக் கொண்டு தாக்கியதாகப் பிரபாகரன் விநாயகா எனும் ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான அந்த ஆடவருக்கு வயது 31.
ஜூன் 13ஆம் தேதி இரவு 7.50 மணியளவில் பிரபாகரன், ஆடவர் ஒருவரைக் கூரான ஆயுதத்தைக் கொண்டு நெஞ்சில் குத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
பாதிக்கப்பட்ட 29 வயது ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவருடன் அவரது பிள்ளைகள் இருவர் இருந்ததாக அவரது அண்டை வீட்டுப் பெண் ஷின் மின் நாளேட்டிடம் கூறினார்.
காயமடைந்த ஆடவர் பிள்ளைகளுடன் வீட்டுக்குத் திரும்பியதாகவும் அந்தக் குழந்தைகள் அண்டை வீட்டுப் பெண்ணிடம் உதவி கேட்டதாகவும் தெரிகிறது.
தான் சென்று பார்த்தபோது ஆடவரின் காயத்திலிருந்து ரத்தம் வெளியேறியதாகவும் காயம் பட்ட இடத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவ உதவி வாகனத்தை அழைத்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.
பிரபாகரன் மீதான வழக்கு ஜூன் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
ஆயுதத்தால் தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ பிரம்படியோ இவற்றில் ஏதாவது இரண்டோ அனைத்துமோ விதிக்கப்படலாம்.