வங்கிக் கணக்கில் 10,000 வெள்ளி கள்ளநோட்டை செலுத்த முயன்றதாக இந்தோனீசிய ஆடவர் ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆரிக் கென்ஜி அல்மிரா வலேரியன் என்னும் அந்த 22 வயது ஆடவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் கிளமெண்டி அவென்யூ 3ல் உள்ள யுஓபி வங்கிக்கு $10,000 கள்ளநோட்டுடன் சென்றார்.
அது கள்ளநோட்டு என்று தெரிந்தும் வங்கிக் கணக்கில் அதனை அவர் செலுத்த முயன்றதாக நம்பப்படுகிறது.
அந்த நோட்டை சந்தேகத்துடன் சோதித்துப் பார்த்த வங்கி அலுவலர், கள்ளநோட்டு அது என்று அறிந்ததும் தமது மேலாளர் ஒருவரிடம் அது பற்றிக் கூறினார்.
அது தொடர்பாகக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளநோட்டு சம்பவம் குறித்து தனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து வலேரியன் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.
அந்த ஆடவர் இம்மாதம் 25ஆம் தேதி தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி அதிகாரியிடம் கள்ளநோட்டைக் கொடுக்கும் குற்றத்திற்கு அதிகபட்சம் 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

