தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பன்னீர்செல்வத்தின் மரண தண்டனை நிறைவேற்றம்

2 mins read
47645b17-b52f-433b-93ab-e8cd1e4adda3
2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதற்காக மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமனுக்கு புதன்கிழமை (அக்டோபர் 8) சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. - படம்: பன்னீர்செல்வம் ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதற்காக மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கோள் காட்டிய ஓர் ஆர்வலரும் தெரிவித்துள்ளனர்.

“ஆமாம், அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது,” என்று பன்னீரின் சகோதரி சங்கரி பரந்தாமன், சிங்கப்பூரைச் சேர்ந்த டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் அமைப்பின் உறுப்பினர் கிர்ஸ்டன் ஹான் ஆகியோர் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

செப்டம்பர் 25 அன்று மற்றொரு மலேசியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இரண்டு வாரங்களுக்குள் சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக மலேசிய இந்தியர் தொடர்பான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களின்கீழ், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தல் குற்றத்துக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.

“இரண்டு வாரங்களுக்குள் தூக்கிலிடப்பட்ட இரண்டாவது மலேசியர் பன்னீர் ஆவார். சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மலேசிய அரசாங்கம் இதில் தலையிட வேண்டும்,” என்று பன்னீரின் குடும்ப வழக்கறிஞர் என். சுரேந்திரன் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்பட்ட சமயத்தில் பன்னீர் தனது வாழ்க்கையை மாற்றியமைத்து ஓர் எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஆர்வலர் ஆக இருந்தார். மேலும் தனது குடும்பத்துடன் இணைந்து நிறுவிய ஒரு அரசு சாரா நிறுவனம் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்ததாக கிர்ஸ்டன் ஹான் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்துக்கு வெளியே நேற்று பன்னீர் குடும்பத்தின் ஆதரவாளர்கள் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சிங்கப்பூர் அரசாங்கம் கருணை காட்டும்படி கோரினர்.

செப்டம்பர் 3, 2014 அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஹெராயின் கடத்தியதற்காக ஜூன் 27, 2017 அன்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மேல்முறையீடு மற்றும் கருணை மனு பின்னர் நிராகரிக்கப்பட்டது.

கடந்த மாதம், சிங்கப்பூர் இதேபோன்ற குற்றத்திற்காக மற்றொரு மலேசியரான கே. தட்சிணாமூர்த்தி (39) என்பவரின் மரண தண்டனையை நிறைவேற்றியது. இது போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான அதன் கடுமையான நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்