உட்லண்ட்ஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் போதைப் பொருள்களுடன் காணப்பட்ட மலேசியா ஆடவர் ஜூன் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். ஆடவர் ஓட்டிய காரில் 1.4 கிலோகிராம் ஹெராயினுடன் மற்ற போதைப் பொருள்களுடன் கண்டெடுக்கப்பட்டன.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட காரில் 496 கிராம் கஞ்சா, 115 கிராம் ஐஸ் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாகக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் ஆணையமும் மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் ஜூன் 17ஆம் தேதி கூட்டறிக்கை வெளியிட்டன.
15 கிராம் எடைகொண்ட டையமொர்ஃபின் (Diamorphine) அல்லது கலப்பிடமில்லா ஹெராயின் ஆகியவற்றை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவோருக்கும் சிங்கப்பூரிலிருந்து வெளியே எடுத்துசெல்வோருக்கும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்.
மூன்று கட்டுகளில் போதைப் பொருள் பதுக்கப்பட்டிருந்ததைக் கூடுதல் சோதனைகள் மூலம் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதிகாரிகள் முதலில் போதைப் பொருள்கள் இருந்த ஒரு கட்டை கண்டுபிடித்து போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். அதையடுத்து மேலும் இரண்டு கட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு $173,000க்கும் அதிகம் என்று குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் ஆணையமும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் தெரிவித்தன. அது கிட்டத்தட்ட 800 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்கு விநியோகம் செய்யக்கூடிய அளவு.
அதிகாரிகள் விசாரணை தொடர்கிறது.