கொவிட்-19 கிருமியுடன் தொடர்புடைய இவ்வாண்டின் முதல் மரணத்தை மலேசியா பதிவு செய்துள்ளது.
ஜூன் 8ஆம் தேதிக்கும் 15 தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அந்த மரணம் நிகழ்ந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
“உயிரிழந்த நபர், இதய நோயாலும் நீரிழிவாலும் பாதிக்கப்பட்டார். அத்துடன் அவர், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை,” என்று சுகாதார அமைச்சு வியாழக்கிழமை ( ஜூன் 20) கூறியது.
2024ல் கொவிட் 19 தொடர்பில் 57 மரணங்கள் பதிவாகின.
கடைசியாக ஏற்பட்ட கொவிட்-19 மரணம், 2024 மே 26ல் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாண்டு கொவிட்-19 நோயாளிகள் அறுவர், மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டதாகவும் மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நோயாளிகள் எல்லோரும் ஏற்கெனவே மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அது தெரிவித்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நோயாளிகளில் நால்வர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் இருவர் சாதாரண படுக்கைப் பிரிவுகளுக்கு இடம் மாற்றப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் இதுவரை மொத்தம் 21,738 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“இருப்பினும், ஆண்டின் 24வது வாரத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய வாரத்தில் பதிவு செய்யப்பட்ட 2,011 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 3,379 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 68 விழுக்காடு அதிகரிப்பு,” என்று கூறிய மலேசிய சுகாதார அமைச்சு, இருப்பினும் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்தது என தி ஸ்டார் செய்தி வெளியிட்டது.