வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கூடுதலான பாலர் பள்ளிகளில் கட்டணம் குறைவாக இருக்கும்.
பாலர் கல்விக் கட்டணங்களைக் கட்டுப்படியான விலையில் வைத்திருப்பதற்கான திட்டத்தில் பங்கேற்கும், ஓரளவு அரசாங்க நிதியுதவியுடன் இயங்கும் பாலர் பள்ளிகளுக்கு (partner operators) இது பொருந்தும். திட்டத்தில் பங்கேற்கும் பாலர் பள்ளிகளுக்கு அரசாங்கம் நிதியுதவி அளிக்கிறது.
அடுத்த ஆண்டு, 34,000க்கும் அதிகமான சிங்கப்பூர் பிள்ளைகள் இத்திட்டத்தால் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை 27,000ஆக உள்ளது.
இந்த ஏற்பாட்டின்படி சம்பந்தப்பட்ட பாலர் பள்ளிகள் மாதந்தோறும் 650 வெள்ளிக்கு மேல் கட்டணம் பெற முடியாது. இதுவரை அதிகபட்சக் கட்டணம் 680 வெள்ளியாக இருந்தது.
இத்திட்டத்தில் ரிலீஃப் சு-சி அறநிறுவனம் (சிங்கப்பூர்), எஷ்கோல் வேலி, குளோபல் எடியூஹப் சிங்கப்பூர், லிட்டில் டால்ஃபின்ஸ் & கிரீனரி, லிட்டில் கிண்டர் மொன்டொசோரி ஆகிய ஐந்து பாலர் பள்ளி அமைப்புகள் புதிதாகச் சேர்க்கப்படவுள்ளன.
திட்டத்துக்கான புதிய ஐந்தாண்டு தவணைக்காலம் ஜனவரி முதல் தேதியிலிருந்து 2030ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிக்கும். திட்டத்தில் மொத்தமாக 33 அமைப்புகள் நடத்தும் 380 பாலர் பள்ளிகள் இடம்பெறும்.
தற்போதிருப்பதைவிட கூடுதலாக 49 பாலர் பள்ளிகள் திட்டத்தில் பங்கேற்கவுள்ளன. திட்டத்தில் பங்கேற்பதற்கான தரநிலைகளைக் கூடுதல் நிலையங்கள் பூர்த்திசெய்தது அதற்குக் காரணம் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அறிக்கையில் தெரிவித்தது.
கட்டுப்படியான விலையில் பாலர் கல்வியை அதிகமானோருக்கு வழங்கத் திட்டத்தில் கூடுதல் பாலர் பள்ளிகள் சேர்க்கப்படுவதாக அமைப்பு குறிப்பிட்டது. தேவை அதிகம் இருக்கும் பகுதிகளில் அத்தகைய சேவைகளை வழங்கக்கூடிய பாலர் பள்ளி அமைப்புகளைத் தாங்கள் தேர்ந்தெடுத்ததாக அமைப்பு சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தக நோக்கத்துடன் இயங்கும் அமைப்புகள், லாப நோக்கில்லா அமைப்புகள் என இருவகை பாலர் பள்ளி அமைப்புகளும் திட்டத்தில் இடம்பெறுவதாக இசிடிஏ தெரிவித்தது.
2026 ஜனவரி மாதத்திலிருந்து குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டணங்கள் குறையும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
அதன்படி, அதிக அளவில் அரசாங்க நிதியுதவியுடன் இயங்கும் பாலர் பள்ளி அமைப்புகள் (anchor operators) பெறும் முழு நாள் குழந்தைப் பராமரிப்புச் சேவைக் கட்டணம் $30 குறைக்கப்பட்டு 610 வெள்ளியாக இருக்கும். ஓரளவு அரசாங்க நிதியுதவியில் இயங்கும் பாலர் பள்ளி அமைப்புகளுக்கு அத்தொகை 650 வெள்ளியாக இருக்கும்.

