உச்சநேரம் அல்லாத வேளைகளில் குறைவான மின்கட்டணம்: 4 மின் நிறுவனங்கள் சலுகை

2 mins read
ebc08fa9-4abd-4d01-aed1-035e77fd5227
சிங்கப்பூரின் குடியிருப்புக் கட்டடங்களில் 1.3 மில்லியன் மின்சாரத் திறனளவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உச்சநேரம் அல்லாத (non-peak) வேளைகளில் குறைவான மின்கட்டணம் வசூலிக்கும் சலுகைத் திட்டங்களை சிங்கப்பூரின் நான்கு மின்விநியோகச் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இங்குள்ள 80 விழுக்காட்டுக் குடியிருப்புக் கட்டடங்கள் மின்சாரத் திறனளவிகளைப் (Smart meters) பெற்றுள்ள நிலையில் சலுகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

வீட்டில் எப்போது, எந்த அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அந்தச் சாதனங்களின் வழி குடியிருப்பாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 6) நிலவரப்படி, குடியிருப்புக் கட்டடங்களில் 1.3 மில்லியன் மின்சாரத் திறனளவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.

அது சிங்கப்பூரின் மொத்த குடியிருப்புக் கட்டடங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு. எல்லா வீடுகளுக்கும் அந்தச் சாதனத்தை நிறுவும் பணிகள் அடுத்த ஆண்டிறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தச் சாதனங்கள் தெரிவிக்கும் தகவல்களை கைப்பேசிச் செயலி வாயிலாகக் குடியிருப்பாளர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தங்கள் வீட்டின் மின் பயன்பாட்டை அவர்கள் அதன் மூலம் அறிந்துகொண்டு, எப்போது அதிகம் பயன்படுகிறது, எப்போது குறைவான மின்சாரம் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியும்.

அதன்வழி மின்கட்டணங்களைக் குறைக்கும் வகையில் மின்விநியோகச் சில்லறை வர்த்தக நிறுவனங்கள், நாள் முழுவதும் வெவ்வேறு நேரத்திற்கு வெவ்வேறு கட்டணங்களை அறிவித்துள்ளன.

சிங்கப்பூரில் உள்ள ஆறு மின்விநியோகச் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் நான்கு மட்டும் தற்போதைக்கு சலுகைக் கட்டணத் திட்டங்களை அறிவித்துள்ளதாக எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெனகோ, பசிபிக்லைட் எனெர்ஜி, கெப்பல் எலெக்ட்ரிக், செனோகோ எனெர்ஜி சப்ளை ஆகியன அந்த நிறுவனங்கள்.

நேர அடிப்படையில் குறைந்தபட்சம் ஐந்து விதமான கட்டணத் திட்டங்களை அவற்றின் இணையத்தளங்கள் பட்டியலிட்டுள்ளன.

அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களின் பயன்பாட்டை உச்சநேரம் அல்லாத வேளைகளுக்கு மாற்ற அவை பரிந்துரைக்கின்றன.

“குறிப்பாக, சலவை இயந்திரம், குளிரூட்டி, மின்னூட்டும் சாதனம் போன்றவற்றை உச்சநேரம் அல்லாத வேளைகளில் பயன்படுத்துவதன் மூலம் வீட்டுக்கான மின்கட்டணத்தைக் குறைப்பதோடு, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மின் தேவையைச் சமநிலைப்படுத்த உதவலாம்,” என்று பசிபிக்லைட் எனெர்ஜி நிறுவனத்தின் பொது நிர்வாகி ஜெரல்டைன் டான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்