அதிர்‌ஷ்டக் குலுக்கல், மின் வர்த்தக மோசடிகளில் $160,000 இழப்பு

2 mins read
441f766d-162a-4dd2-9677-f5c455e0fe50
ஃபேஸ்புக் நேரலையில் நடைபெற்ற குறைந்தது 30 அதிர்‌ஷ்டக் குலுக்கள் மோசடிகள் பற்றியும் 13 மின் வர்த்தக மோசடிகள் பற்றியும் புகார் அளிக்கப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

சமூக ஊடக நேரலை மூலம் நடைபெற்ற அதிர்‌‌‌ஷ்டக் குலுக்கல், மின்வர்த்தக மோசடிகள் மூலம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பாதிக்கப்பட்டோர் குறைந்தது $160,000 தொகையை இழந்ததாகச் சனிக்கிழமை (அக்டோபர் 18) காவல்துறை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நேரலையில் நடைபெற்ற குறைந்தது 30 அதிர்‌ஷ்டக் குலுக்கள் மோசடிகள் பற்றியும் 13 மின் வர்த்தக மோசடிகள் பற்றியும் புகார் அளிக்கப்பட்டன.

அதிர்ஷ்டக் குலுக்கல் மோசடிகளின்போது ரொக்கப் பரிசுகளுக்கான பரிசு அட்டைகளைப் பாதிக்கப்பட்டோர் வாங்கினர்.

அதையடுத்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்பையும் பரிசுத் தொகையையும் அதிகரிக்க கூடுதல் பணம் செலுத்தும்படி அவர்களிடம் சொல்லப்பட்டது.

அதிர்‌‌ஷ்டக் குலுக்கல் மோசடியில் பாதிக்கப்பட்டோர் வெற்றிபெற்றதாக நம்பியவுடன் மோசடிக்காரர்கள் கூடுதல் பணம் அனுப்பும்படி அவர்களிடம் கேட்பர். பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நிர்வாகச் செலவுகளுக்காக அவர்கள் அந்தப் பணத்தைச் செலுத்தும்படி கூறினர்.

மின் வர்த்தக மோசடிகளைப் பொறுத்தவரை ஃபேஸ்புக் நேரலையில் ‘தங்கப் புதையல் பைகள்’ குறித்து மோசடிக்காரர்கள் விளம்பரம் செய்வர். அத்தகைய விளம்பரத்தில் தங்கம் இருக்கும் என்றும் பாதிக்கப்பட்டோர் நம்ப வைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டோர் தங்கப் பைகளை வெல்லவில்லை என்றால் கூடுதல் பைகளைக் கூடுதல் பணம் கொடுத்து வாங்கும்படி மோசடிக்காரர்கள் கூறுவர்.

தொடக்கத்தில் கூறப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்குத் தங்கத்தை வாங்கித் தருவதாகவும் மோசடிக்காரர்கள் வாக்குக் கொடுத்தனர். அதற்கும் பாதிக்கப்பட்டோர் கூடுதல் பணத்தை அனுப்பும்படி அறிவுறுத்தப்படுவர்.

இரண்டு விதமான மோசடிகளிலும் பாதிக்கப்பட்டோர் பரிசுத் தொகையைப் பெறாதபோதே ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

முன்பின் தெரியாதோருக்குப் பணம் அனுப்பிவைப்பது குறித்து மிகவும் கவனமாக இருக்கும்படி அதிகாரிகள் பொதுமக்களை எச்சரிக்கின்றனர்.

கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் அதிர்‌ஷ்டக் குலுக்கல் மோசடியில் கிட்டத்தட்ட 190 பேர் குறைந்தது $521,000 தொகையை இழந்தனர்.

குறிப்புச் சொற்கள்