சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ வாழ்ந்த 38 ஆக்ஸ்லி ரோடு இல்லம் சுதந்திர வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய தருணங்களின் சாட்சியாகத் தாங்கி நிற்பதால் அதனைக் கட்டிக்காப்பது அவசியம் என்று கலாசார, சமூக, இளையர் துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ தெரிவித்துள்ளார்.
அந்த இல்லத்தை தேசிய நினைவுச் சின்னமாக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 6) அவர் விளக்கினார்.
மக்கள், இடம், நிகழ்வுகள் இவை யாவும் சங்கமிக்கும் இதுபோன்ற இடங்கள் சிங்கப்பூரில் ஒருசில மட்டுமே உள்ளதாக திரு நியோ கூறினார்.
அவர் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் “நமது தேசம் இளமையானது. எனவே சுதந்திரம் பிறந்தது உள்ளிட்ட வரலாற்றின் முக்கிய தருணங்களின் சாட்சியாக விளங்கும் தனித்துவ இல்லத்தை கட்டிக்காக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “நினைவு இல்லமாகப் பாதுகாப்பதில் சிங்கப்பூர் இதுவரை எந்த ஒரு தலைவரையும் நினைவுகூரவில்லை.
“மாறாக, இதுபோன்ற தளங்களும் அடையாளங்களும் சிங்கப்பூர் ஒரு பல இன, பல சமய, அரசுரிமை நாடாக உருவாவதற்குக் தலைவர்கள் கடினமாக உழைத்து வகுத்த பாதையை சிங்கப்பூரர்களுக்கு நினைவூட்டும்.
“நாம் எங்கிருந்து வந்தோம், நாம் யார், நான் அனைவரும் ஒன்றிணைந்து சாதித்தது என்ன என்பவற்றை வருங்காலச் சந்ததியினர் புரிந்துகொண்டு வாழக்கூடிய இடத்தை அரசாங்கம் பாதுகாக்கிறது,” என்றார் திரு நியோ.
38 ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை பொறுப்புமிக்க ஒன்றாக உருவாக்கும் தனது அணுகுமுறையை அரசாங்கம் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“1950களில் ஒரு பிரிட்டிஷ் காலனித்துவப் பிரதேசமாக இருந்த சிங்கப்பூர் சுதந்திர தேசமாக உருமாறியது தொடர்பான முக்கிய நிகழ்வுகளுக்குச் சாட்சியாக அந்த இல்லம் திகழ்கிறது.
“சிங்கப்பூரை நிறுவ உறுதுணையாக இருந்த தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடவும் நாட்டின் சுதந்திர இயக்கத்திலும் அதனைத் தொடர்ந்து உருவான தேசிய வரலாற்றிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை எடுக்கவும் அந்த இல்லம் பயன்பட்டது.
“உதாரணமாக, 1955ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியம் குறித்து டாக்டர் கோ கெங் சுவீ, டாக்டர் டோ சின் சை, திரு எஸ் ராஜரத்னம், திரு கே.எம். பைர்ன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து விவாதிக்கக்கூடிய ஓர் இடமாக அந்த இல்லத்தின் அடித்தள உணவருந்தும் அறை பயன்பட்டது,” என்று திரு நியோ விளக்கினார்.

