பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) சீனாவுக்கு ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.
திரு வோங், சீனத் தலைவர்களுடன் சிங்கப்பூர்-சீனா இருதரப்பு உறவின் உத்திபூர்வப் பாதையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளார்.
இது, சென்ற ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு திரு வோங் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவப் பயணமாகும். சீனாவின் ஆக உயரிய பதவியில் உள்ள மூன்று தலைவர்களான அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் லி கியாங், தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் சாவ் லெஜி ஆகியோரை திரு வோங் பெய்ஜிங்கில் சந்திக்கவுள்ளார்.
இப்பயணம், தங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பும் மறுவுறுதிப்படுத்தவும் இருதரப்பு உறவு, வட்டார, உலகளாவிய விவகாரங்கள் ஆகியவற்றைப் பற்றி இருநாட்டுத் தலைவர்கள் பேசவும் வாய்ப்பளிக்கும் என்றும் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டது.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவின் 35ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் வேளையில் பிரதமர் வோங்கின் சீனப் பயணம் இடம்பெறுகிறது. முன்னதாக திரு வோங், துணைப் பிரதமராக இருந்தபோது 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
சிங்கப்பூர், சீனாவில் ஆக அதிக அளவில் முதலீடு செய்துவரும் நாடாகும்.
இவ்வாண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரும் நிதி மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவும் திரு வோங்குடன் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.