தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைசி நிமிட தீபாவளி பரபரப்பு

3 mins read
2defc6c7-ef51-4809-abe9-4e511b0bd927
கடைசி நேரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப தையல் சேவைகளை செய்து தரும் தையல்காரர்கள். - படம்: த. கவி

நாளை தீபாவளி. தீபாவளி பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தடபுடலாக நடைபெறும் நேரத்தில் பண்டிகை நாளன்றும் பலரின் வீட்டில் கொண்டாட்ட ஒளி வீசத் தொடங்கியிருக்கும்.

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது லிட்டில் இந்தியா தான். பண்டிகை உணர்வில் திளைக்க மட்டுமின்றி தீபத் திருநாளுக்கான பொருள்களும், புத்தாடைகளையும் வாங்க தேக்கா ஒரே இடமாக அமைந்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதாலும் மக்களின் கூட்டம் அலைமோதியது.

கடைசி நேரத்தில் தேவையான பொருள்களை வாங்க வந்தவர்களும் முந்தைய நாளாக இருப்பதால் பொருள்களுக்கான தள்ளுபடிகள் இருக்கும் என எதிர்பார்த்தும் வாடிக்கையாளர்கள் திரண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுப்பு என்பதால் வெளிநாட்டு ஊழியர்களும் தேக்காவிற்கு வந்து தீபாவளி குதூகலத்தில் இணைந்தனர்.

“ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிய நாங்கள் முடிவெடுத்தோம். சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாடுவது எனக்குப் பெரும் இன்பத்தை அளிக்கிறது,” என்று தெரிவித்தார் வெளிநாட்டு ஊழியர் செல்வராசு பூவரசன், 24.

தேக்கா சந்தை

தேக்கா சந்தையில் கண்கவர் ஆடைகளை வாங்க வந்தவர்கள் ஒருபுறம் இருக்க தையல்காரர்களும் ஞாயிற்றுக்கிழமையன்று பரபரப்பாகத்தான் காணப்பட்டனர்.

தேக்கா சந்தையின் ஆடைக் கடைகளில் கூட்டம் குறையாமல் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருந்தனர்.
தேக்கா சந்தையின் ஆடைக் கடைகளில் கூட்டம் குறையாமல் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருந்தனர். - படம்: த. கவி

“கடைசி நேரத்தில் வாடிக்கையாளர்கள் தையல் சேவைகளை நாடுவது குறைவாக இருந்தாலும் நாங்கள் நள்ளிரவு 12 மணி வரை இங்கு இருப்போம். சில வாடிக்கையாளர்கள் ரவிக்கையின் கழுத்து வடிவங்களை மாற்றியமைக்கும்படி கேட்பார்கள்,” என்றார் லேடீஸ் சென்டர் தையல் கடை உரிமையாளர் ஜெகநாதன் வசந்தி, 58.

பாகட் எம்போரியம் துணிக் கடையில் தீபாவளிக்கு முந்தைய நாளன்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் அவர்கள் குறைவான விலைகளில் துணிகளை விற்க முடிவெடுத்துள்ளனர்.

“புத்தாடை, பலகாரங்கள், பூஜைக்குத் தேவையான பொருள்களை வாங்க தேக்கா வந்தேன். வேலை காரணமாகத் தீபாவளி முந்தைய நாளன்று வந்து தான் தேவையானவற்றை வாங்க முடிந்தது. விலைகளும் நியாயமான வகையில் தான் இருந்தன,” என்று சொன்னார் வாடிக்கையாளர் பிரியதர்ஷினி, 20.

தனது குடும்பத்தினருடன் தள்ளுபடிகளை எதிர்பார்த்து தேக்காவிற்கு வந்திருந்தார் வாடிக்கையாளர் கோவின் ராஜ், 38. தேக்காவில் தீபாவளி உணர்வு உற்சாகமாகக் காணப்பட்டதாக சொன்ன அவர் தையல் சேவைக்குத் தந்த ஆடைகளைக் கடைசி நேரத்தில் எடுக்க வந்ததாகத் தெரிவித்தார்.

இரண்டு மணி நேரத்திற்குள் தையல்காரர் துணியைத் தருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார் கோவின் ராஜ்.

தேக்கா ஈரச் சந்தையில் நகர்வதற்குக் கூட இடமில்லாமல் கூட்டம் கூடியிருந்தது இறைச்சிக் கடைகளில்தான். அன்றலர்ந்த இறைச்சி, கடல் உணவு வகைகள், கோழி இறைச்சி போன்றவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருந்தனர்.

தேக்கா ஈரச் சந்தையில் திரும்பிய பக்கமெல்லாம் இறைச்சி வாங்கும் வாடிக்கையாளர்கள்.
தேக்கா ஈரச் சந்தையில் திரும்பிய பக்கமெல்லாம் இறைச்சி வாங்கும் வாடிக்கையாளர்கள். - படம்: த. கவி

தேக்கா ஈரச் சந்தையில் இருக்கும் சாமீஸ் வாழையிலைக் கடையிலும் கூட்டம் குறையவில்லை.

சாமீஸ் வாழையிலைக் கடையில் தீபாவளிக்காக 40 வாழையிலைக் கட்டுகள் கொண்டு வரப்பட்டன.
சாமீஸ் வாழையிலைக் கடையில் தீபாவளிக்காக 40 வாழையிலைக் கட்டுகள் கொண்டு வரப்பட்டன. - படம்: த. கவி

“காலையிலிருந்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தான் உள்ளது. கிட்டத்தட்ட 500 வாடிக்கையாளர்கள் வந்துவிட்டனர். பண்டிகைக்காக 40 வாழையிலைக் கட்டுகளைக் கொண்டு வந்துள்ளோம். அவை அனைத்தும் தீர்ந்துவிட்டன. வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதற்கான இலைகளும், பூஜைக்கான இலைகளும் விரும்பி வாங்கினார்கள்,” என்று குறிப்பிட்டார் சாமீஸ் வாழையிலைக் கடையின் உரிமையாளர் கோவிந்தசாமி பன்னிர்செல்வம், 62.

கேம்பல் லேன் சந்தை

கடைசி நேரத்தில் பலகாரங்கள் வாங்குவது, வீட்டிற்குத் தேவையான அலங்கார விளக்குகளை வாங்குவது என கேம்பல் லேனில் இருக்கும் தீபாவளிச் சந்தையில் மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர்.

கேம்பல் லேனில் வாடிக்கையாளர்கள் கடைசி நேரத்தில் பொருள்கள் வாங்கினர்.
கேம்பல் லேனில் வாடிக்கையாளர்கள் கடைசி நேரத்தில் பொருள்கள் வாங்கினர். - படம்: த. கவி

“அலங்கார விளக்குகள், பலகாரங்கள் வாங்க கேம்பல் லேன் வந்தோம். சென்ற வாரம் தீமிதித் திருநாள் என்பதால் இந்த வாரம் கடைசி நேரத்தில் பொருள்கள் வாங்க வேண்டிய நிலை,” என்றார் வாடிக்கையாளர் ஜெயகௌதம், 34.

லிட்டில் இந்தியா ஆர்கெட்டில் பலகாரங்கள் வாங்க கூட்டமாகக் கூடிய வாடிக்கையாளர்கள்.
லிட்டில் இந்தியா ஆர்கெட்டில் பலகாரங்கள் வாங்க கூட்டமாகக் கூடிய வாடிக்கையாளர்கள். - படம்: த. கவி
குறிப்புச் சொற்கள்