இவ்வாண்டு ஜூலை மாதம் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கு யு-சேவ் பயனீட்டு மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அரசாங்க உதவித் திட்டத்தின்கீழ் இந்தக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
அவரவர் வசிக்கும் வீவக வீட்டு வகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சமாக 190 வெள்ளி யு-சேவ் கட்டணத் தள்ளுபடியும் ஒரு மாதம் வரையிலான சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவும் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 30) அறிக்கையில் தெரிவித்தது. உதாரணமாக, நாலறை வீவக வீட்டில் வசிப்பவர்களுக்கு 150 யு-சேவ் கட்டணத் தள்ளுபடியும் அரை மாத சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவும் வழங்கப்படும்.
ஓரறை, ஈரறை வீவக வீடுகளில் வசிப்போருக்கு 190 வெள்ளி யு-சேவ் கட்டணத் தள்ளுபடியும் ஒரு மாத சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவும் வழங்கப்படும்.
தகுதிபெறும் வீடுகளில் வசிப்போரின் எஸ்பி சர்விசஸ், நகர மன்றக் கணக்குகளில் கட்டணத் தள்ளுபடிகள் பதிவு செய்யப்படும். தள்ளுபடிகளைப் பெறுபவர்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை.
நிரந்தரப் பொருள், சேவை வரித் திட்டம், மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் ஆகியவற்றின்கீழ் இந்தக் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தையும் பொருள், சேவை வரி உயர்வையும் சமாளிக்க இந்தத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, வீவக வீடுகளில் வசிக்கும் தகுதிபெறுவோர் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் மாத வரை நீடிக்கும் தற்போதைய நிதியாண்டில் 760 வெள்ளி வரை மதிப்புள்ள யு-சேவ் தள்ளுபடிகளைப் பெறுவர். அதே காலகட்டத்தில், தகுதிபெறுவோர் ஒட்டுமொத்தமாக 3.5 மாதங்கள் வரையிலான சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறுவர்