திருமண விழாவிலிருந்து மொய் பணம் அடங்கிய பெட்டிகளைத் திருடிய ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
36 வயது லீ யி வெய் கிட்டத்தட்ட $50,000 திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சூதாட்டத்துக்கு அடிமையான லீ, அப்பணத்தில் பெரும்பாலானவற்றை சூதாடி இழந்தார்.
அவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு லீ இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி கிறிஸ்டஃபர் கோ உத்தரவிட்டார்.
இழப்பீடு தொகை கொடுக்காவிடில் அதற்குப் பதிலாக அவர் கூடுதலாக 100 நாள்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 5ஆம் தேதியன்று ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டல் சிங்கப்பூர் சவுத் பீச்சில் உள்ள விழா அறையில் திருமண விருந்துபரசிப்பு நடந்துகொண்டிருந்தபோது, மொய் பணம் அடங்கிய பெட்டிகளை லீ திருடினார்.
லீ, அவ்விடத்தில் முன்பு பணிபுரிந்தவர். எனவே, அவ்விடத்தைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்று அரசாங்கத் தரப்பு வழங்கறிஞர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிற்பகல் 12.50 மணி அளவில் பெட்டிகள் அருகில் யாரும் இல்லாதபோது அவற்றை எடுத்துக்கொண்டு லீ அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
மொய் பணம் அடங்கிய பெட்டிகளைக் காணவில்லை என்று திருமண விழா ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் லீ அடையாளம் காணப்பட்டார்.
பிற்பகல் 1 மணி அளவில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
திருடிய பணத்தை தேசிய நூலகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் லீ வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
அதிலிருந்து $348 பயன்படுத்தி அவர் புத்தாடைகளை வாங்கினார்.
பிறகு $60க்கு மேலும் சில புத்தாடைகளை லீ வாங்கினார்.
திருடிய பணத்தில் பெரும்பாலானவற்றை அவர் சூதாடி இழந்தார்.
ஏப்ரல் 7ல் அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவரிடம் $3,000 எஞ்சியிருந்தது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட லீ, பாதிக்கப்பட்ட தம்பதியரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.