பொது இடத்தில் தொல்லை விளைவித்ததற்காகக் கடந்த மே மாதம் ஒரு வாரதத்துக்குச் சிறையில் அடைக்கப்பட்ட ஆடவர், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் அதே குற்றம் புரிந்தார்.
இதன் காரணமாக அவருக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பொது இடத்தில் தொல்லை விளைவித்ததற்காக 59 வயது நியோ பெங் இயாவுக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதியன்று $1,500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மே மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு, தண்டனை குறைப்பு ஆணையின்கீழ் ஜூலை 29லிருந்து அக்டோபர் 19 வரை குற்றம் புரியாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று அவர் சிராங்கூன் சென்ட்ரலில் உள்ள சோம்ப் சோம்ப் உணவு நிலையத்தில் முறையற்ற வகையில் நடந்துகொண்டார்.
இரவு 8.30 மணி அளவில் அவர் அங்கு தமது ஆடைகளைக் களைந்து மிதிவண்டி நிறுத்துமிடத்தில் சிறுநீர் கழித்தார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதே நாளன்று அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 4லிருந்து அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று அவர் காணொளி மூலம் நீதீமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட நியோவுக்கு 14 நாள்கள் சிறை விதிக்கப்பட்டது.
தண்டனை குறைப்பு ஆணையை மீறியதற்காக அவருக்குக் கூடுதலாக 14 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.