மாணவர் ஒருவரை மானபங்கப் படுத்தும் நோக்குடன் அவரிடம் பலவந்தமாக நடந்துகொண்டதை ஒப்புக்கொண்ட முன்னாள் தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான குற்றவாளி சீனப் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.
மேலும் இரு குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்; அக்குற்றச்சாட்டுகளை அவர் மீது மறுபடியும் சுமத்த முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த 38 வயது ஆசிரியர், அவருக்கும் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் இடையே இருந்த புனிதமான நம்பிக்கையை உடைத்துவிட்டார் என்று மாவட்ட நீதிபதி லிம் செ ஹாவ் நேற்று (ஜூன் 20) கூறினார். அந்த ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவரின் சீன ஆசிரியர் மட்டுமின்றி மாணவரின் வகுப்பு ஆசிரியராகவும் (form teacher) பணியாற்றினார்.
குற்றவாளி, 2019ஆம் ஆண்டில் மாணவரிடம் தவறாக நடந்துகொண்டார். பின்னர் 2022 ஏப்ரல் மாதம் அந்த மாணவர் சம்பவம் குறித்து பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியரிடம் தெரியப்படுத்தினார். பிறகு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
அச்சம்பவத்தில் மாணவருக்கு ஏழு வயதுதான் ஆகியிருந்தது என்று நீதிபதி எடுத்துரைத்தார்.
14 வயதுக்குக்கீழ் உள்ள சிறுவரை மானபங்கப்படுத்தியதாக சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனை, பிரம்படிகள், அபராதம் அல்லது அவற்றில் எந்தத் தண்டனையும் ஒன்றாக விதிக்கப்படலாம்.