செயற்கை நுண்ணறிவு மூலம் வர்த்தக முதலீட்டுத் திட்டம் வழங்குவதாகக் கூறி $4.6 மில்லியன் வரை ஏமாற்றிய குற்றத்தை நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஓங் காய் மின், 42, எனப்படும் அவர் சிங்கப்பூர் இன்டெக்ஸ் டிரேடிங் இன்ஸ்டிடியூட் (SITI) என்னும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார்.
முதலீட்டாளர்களான ஏழு தனிநபர்களையும் ஒரு நிறுவனத்தையும் ஏமாற்றியது தொடர்பான எட்டுக் குற்றச்சாட்டுகளை புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த எட்டுக் குற்றச்சாட்டுகளும் 537,000 அமெரிக்க டாலர் மற்றும் 2.7 மில்லியனுக்கும் மேற்பட்ட சிங்கப்பூர் வெள்ளி தொடர்பானவை.
அவர் மீதான இதர குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்படும்.
தமது நிறுவனம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கி வருவதாக முதலீட்டாளர்களிடம் ஓங் கூறினார்.
அந்தத் திட்டங்கள் முதலீட்டாளர்கள் சார்பாக தானியக்க முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் என்றும் மாதத்திற்குக் குறைந்தபட்சம் 3 விழுக்காடு வரை லாபம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அந்த லாபத்தை 10 விழுக்காடு வரை எதிர்பார்க்கலாம் என்றும் கூறிய அவர், முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தைக் கொண்டு எந்த வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
அதனால் அது குறித்து முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்தனர். வர்த்தக விவகாரத் துறை 2021 மார்ச் முதல் 2022 ஜூன் வரை 30 புகார்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓங் மீது இவ்வாண்டு ஜனவரியில் குற்றம் சாட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஓங்கிற்கு செப்டம்பர் 19ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.