துவாசில் பூனைக்குட்டி ஒன்று துன்புறுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விவகாரம் தொடர்பில் தேசியப் பூங்காக் கழகம் விசாரணை மேற்கொள்கிறது.
சந்தேகத்துக்குரியவர் பூனைக்குட்டியைப் பிளாஸ்டிக் கலனில் போட்டு, பலமுறை அதை உருட்டியதாகக் கூறப்படுகிறது.
டெக் பார் கிரசென்ட்டில் நடந்த அந்தத் துன்புறுத்தல் சம்பவம் குறித்து தேசியப் பூங்காக் கழகத்திற்குத் தகவல் கிடைத்ததாகவும் அதன் தொடர்பில் விசாரிக்கப்படுவதாகவும் அமலாக்க, புலானாய்வுக் குழுவின் இயக்குநர் ஜெசிக்கா குவாக் வியாழக்கிழமை (ஜூன் 26) தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 9.45 மணிக்கும் 10.30 மணிக்கும் இடையே, டெக் பார் கிரசென்ட்டில் உள்ள ஊழியர்க்கான சிற்றுண்டி நிலையத்தில் பூனைக்குட்டி துன்புறுத்தப்பட்டதாக விலங்குவதைத் தடுப்புச் சங்கம் ஜூன் 23ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
பூனைக்குட்டியைத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படுபவரின் சக ஊழியர், சங்கத்திடம் அதுகுறித்துத் தகவல் அளித்தார்.
சங்கத்தின் அதிகாரிகள் ஏப்ரல் 1ஆம் தேதி சம்பவ இடத்தில் திடீரெனச் சோதனை மேற்கொண்டனர். அந்தப் பூனைக்குட்டி விடுவிக்கப்பட்டுவிட்டதாக அவர்களிடம் கூறப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஊழியருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், மேல்விசாரணைக்கு உதவும் வகையில் கண்காணிப்பு கேமராப் பதிவுகளைக் காட்ட அந்த வேலையிடத்தின் மேலாளர் மறுத்துவிட்டதாகச் சங்கம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த விவகாரம் குறித்து தேசியப் பூங்காக் கழகத்தின் விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவிடம் புகாரளிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு (2024) விலங்குகள் துன்புறுத்தப்பட்டதன் தொடர்பில் 453 புகார்கள் அளிக்கப்பட்டன என்றும் அவற்றில் 220 சம்பவங்கள் பூனைகள் தொடர்பானவை என்றும் சங்கம் கூறியது.
சிங்கப்பூரில் விலங்குவதைச் சம்பவங்களில் முதல் முறை ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் 18 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ $15,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றத்தைச் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $30,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.