முதலீடுகள் தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காண உதவும் அனைத்துலக மையம் சிங்கப்பூரில் அலுவலகம் ஒன்றைத் திறக்க இருக்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே ஊழியர்களுடன் கூடிய அலுவலகத்தை அது திறப்பது இதுவே முதல்முறை.
இதுகுறித்து உத்தேச ஒப்புதல் ஆவணம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகச் சட்ட அமைச்சர் எட்வின் டோங் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) அறிவித்தார்.
இது ஒரு மைல்கல் என்று அவர் வர்ணித்தார்.
ஐந்து உலக வங்கிக் குழும அமைப்புகளில் இந்த மையமும் ஒன்று. முதலீட்டாளர்களுக்கும் நாடுகளுக்கும் இடையிலான முதலீடு தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காண உதவும் தளமாக அது செயல்பட்டு வருகிறது.
ஐந்து உலக வங்கிக் குழும அமைப்புகளின் அலுவலகங்களைக் கொண்ட முதல் நாடாகச் சிங்கப்பூர் திகழும் என்றார் அமைச்சர் டோங்.
முதலீட்டு சர்ச்சைகளைத் தடுப்பது, அவை தொடர்பாகத் தீர்வு காண்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை தொடர்பாக வட்டார நாடுகளுக்கு உள்ள தேவையை மையத்தின் அலுவலகம் பூர்த்தி செய்ய உதவும் அவர் கூறினார்.
முதலீடுகள் தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காண உதவும் அனைத்துலக மையத்தைச் சிங்கப்பூருக்கு வரவேற்பதாக அமைச்சர் டோங் தெரிவித்தார்.
அனைத்துலக சர்ச்சைத் தீர்வு மற்றும் சிந்தனைத் தலைமைக்கான நடுவமாக சிங்கப்பூரின் நிலையை புதிய அலுவலகம் வலுப்படுத்தும் என்றார் அவர்.