மின்னிலக்க மோசடிகள் மூலம் ஏற்படும் இழப்புகளிலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்கும் காப்புறுதித் திட்டத்தைத் தற்போது சிங்கப்பூரில் கூடுதல் காப்புறுதி நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்தத் தனிநபர் இணையக் காப்புறுதித் திட்டத்தை முதன்முதலாக ‘எட்டிக்கா’ காப்புறுதி நிறுவனம் 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
தற்போது அந்தக் காப்புறுதித் திட்டத்தைச் சிங்கப்பூரில் குறைந்தது ஐந்து காப்புறுதி நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்தக் காப்புறுதித் திட்டத்தை வாங்குபவர்கள் ஒருவேளை இணைய மோசடி காரணமாக இழப்புகளைச் சந்தித்தால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.
ஒவ்வோர் ஆண்டும் $25,000 வரம்புடனான வழங்குதொகையை இந்தக் காப்பறுதித் திட்டம் கொண்டுள்ளது.
இணைய மோசடி, அதன் காரணமாகப் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இக்காப்புறுதித் திட்டம் வழங்கப்படுகிறது.
அனுமதி இல்லாத பரிவர்த்தனைகள், மின் வர்த்தக மோசடி, அடையாளத் திருட்டு போன்ற இணையக் குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு இந்தக் காப்புறுதித் திட்டம் மூலம் இழப்பீடு தரப்படும்.
2024ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் மோசடிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் $1.1 பில்லியன் இழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுவே ஒரே ஆண்டில் மோசடிக்காரர்களால் பறிக்கப்பட்ட ஆக அதிகமான தொகை என்று சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் மோசடிக் குற்றங்கள் குறித்து ஆக அதிகமான புகார்களைக் காவல்துறை பெற்றது. அந்த ஆண்டில் மோசடிக் குற்றங்கள் தொடர்பாக 51,501 புகார்கள் அளிக்கப்பட்டன.
2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 46,563ஆக இருந்தது.
2024ஆம் ஆண்டில் பதிவான மோசடிக் குற்றங்களில் ஆக அதிகம் மின் வர்த்தக மோசடி ஆகும்.
அவ்வாண்டில் 11,665 மின் வர்த்தக மோசடிகள் பதிவாகின. அவற்றின் மூலம் குறைந்தது $17.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை நடத்திய ஆய்வில், சிங்கப்பூரில் நால்வரில் மூவருக்குப் போலி பதிவுகளுக்கும் உண்மையான பதிவுகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஆய்வின் முடிவுகள் ஜூலை 2ல் வெளியிடப்பட்டன.
இப்படி இருக்க, தொடர்ந்து நிகழ்ந்து வரும் மோசடிச் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் வழங்க காப்புறுதி நிறுவனங்கள் புதிய ஏற்பாடு மூலம் முன்வந்துள்ளன.